இந்திய வன அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு


இந்திய வன அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 19 Feb 2018 9:15 PM GMT (Updated: 19 Feb 2018 8:14 PM GMT)

இந்திய வன அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய வன அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கு தேர்வு நடத்துவது போல, 2017-ம் ஆண்டு இந்திய வன அலுவலர் (ஐ.எப்.ஓ.எஸ்.) பணிக்கு 110 காலி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கான முதன்மை தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பொதுப்பிரிவில் 57 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 29 பேரும், ஆதிதிராவிடர் பிரிவில் 16 பேரும், பழங்குடியினர் பிரிவில் 8 பேரும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அந்தவகையில், 2017-ம் ஆண்டுக்கான இந்திய வன அலுவலர் பணிக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக நேர்முகத்தேர்வுக்கு திறம்பட பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.ஓ.எஸ். அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது.

நேர்முகத்தேர்வு கடந்த 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 110 இடங்களுக்கு 298 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வி மையத்தில் படித்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

இ.கார்த்திகேயனி, இ.பிரசாத், சிவகுருபிரபாகரன், ஜோன்ஸ்ஜஸ்டின், விஜய் ஆனந்தன், ஏ.பிரவீண், ரெஜனினால்டு ராய்ஸ்டன், பி.கணேசன், விக்னேஷ் அப்பாவு, டி.அஸ்வின்குமார். இதில் கார்த்திகேயனி தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றவர்களுக்கு மனித நேய அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கண்ட தகவலை மனித நேய மையத்தின் இயக்குனர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.

Next Story