கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது


கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 19 Feb 2018 10:15 PM GMT (Updated: 19 Feb 2018 8:21 PM GMT)

தகவல்களை சேமிக்கும் கருப்பு பெட்டியுடன் கூடிய அதிநவீன மின்சார ரெயில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை,

தகவல்களை சேமிக்கும் கருப்பு பெட்டியுடன் கூடிய அதிநவீன மின்சார ரெயில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ரெயில் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் அதிநவீன மின்சார ரெயில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ரெயில் கடற்கரை-செங்கல்பட்டு இடையே 6 சேவைகளையும், கடற்கரை-தாம்பரம் இடையே 3 சேவைகளையும் வழங்க இருக்கிறது.

முதல் சேவையாக இன்று காலை 8.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு 9.15 மணிக்கு சென்றடையும். இந்த அதிநவீன வசதி கொண்ட மின்சார ரெயிலில் விமானத்தில் இருப்பதுபோல் தகவல்களை சேமிக்கும் கருப்பு பெட்டியும் இருக்கும். கருப்பு பெட்டி ரெயிலின் செயல்பாடு, கட்டுப்பாட்டு கருவிகள் எப்படி இயங்குகிறது என்பதை சேமித்துவைக்கும். அதிகபட்சம் 105 கிலோ மீட்டர் வேகத்தில் 12 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் செல்லும். துருப்பிடிக்காத இரும்பினால் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை தயாரித்த இந்த மின்சார ரெயிலில் அதிநவீன வசதியாக கணினி மயமாக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், ‘பிரேக்கிங்’ அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து பெட்டிகளிலும் மின்விசிறியும், பெட்டிகளின் மேற்கூரையில் காற்றோட்ட அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். 1,168 பயணிகள் அமர்ந்து கொண்டும், 4,852 பயணிகள் நின்று கொண்டும் பயணம் செய்யலாம்.

இந்த தகவல்களை தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

Next Story