சிவப்பிரியா தொடர்பான 50 ஆவணங்கள் சாலையில் கிடந்ததால் பரபரப்பு


சிவப்பிரியா தொடர்பான 50 ஆவணங்கள் சாலையில் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 9:45 PM GMT (Updated: 21 Feb 2018 7:33 PM GMT)

9½ ஏக்கர் அரசு நிலத்தை வளைத்ததாக சார்பதிவாளர் சிவப்பிரியா மற்றொரு வழக்கில் மீண்டும் கைதானார். அவர் தொடர்பான 50 ரகசிய ஆவணங்கள் சாலையில் கிடந்ததால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

9½ ஏக்கர் அரசு நிலத்தை வளைத்ததாக சார்பதிவாளர் சிவப்பிரியா மற்றொரு வழக்கில் மீண்டும் கைதானார். அவர் தொடர்பான 50 ரகசிய ஆவணங்கள் சாலையில் கிடந்ததால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நில அபகரிப்பு புகாரில் சென்னை ராயப்பேட்டை சார்பதிவாளர் சிவப்பிரியாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 2014-ம் ஆண்டு சோழிங்கநல்லூர் அருகே உள்ள 9½ ஏக்கர் அரசு நிலத்தை வளைத்ததாக தாசில்தார் ரவிச்சந்திரன் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அப்போது ஆர்.டி.ஓ. எட்டியப்பன் உள்ளிட்ட 5 பேர் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் சார்பதிவாளர் சிவப்பிரியா மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிவப்பிரியாவை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2-வது முறையாக கைது செய்தனர். இதற்காக அவர் புழல் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கிலும் அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவப்பிரியா குடும்பத்தோடு மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் வசித்துவந்தார். சிவப்பிரியாவின் கணவர் தலைமை செயலகத்தில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சிவப்பிரியாவின் கணவர் மீதும் புகார்கள் உள்ளன. அவர் மீதும் விசாரணை நடந்துவருகிறது. அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களில் சிக்கியுள்ள சார்பதிவாளர் சிவப்பிரியாவை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பினாமி பெயரில் சிவப்பிரியா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் தெரிகிறது. அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்தப்பையை ரோந்து போலீசார் எடுத்து திறந்து பார்த்தனர். அப்போது அதற்குள் ஏராளமான ரகசிய ஆவணங்கள் இருந்தது. அதை போலீசார் படித்து பார்த்தபோது அவை சார்பதிவாளர் சிவப்பிரியா சம்பந்தப்பட்டது என்று தெரியவந்தது.

அதை அங்கு வீசிச்சென்றவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த ஆவணங்களை ரோந்து போலீசார், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மயிலாப்பூர் போலீசார் அந்த ஆவணங்களை சிவப்பிரியா வழக்கை விசாரித்துவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பிரியா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சிவப்பிரியா சம்பந்தப்பட்ட ஏராளமான சொத்து ஆவணங்கள், அவர் மற்ற அதிகாரிகளோடு தொடர்பு வைத்திருந்த தகவல்கள், அவர் மீது கூறப்பட்ட புகார் மனுக்கள் போன்ற 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் அதில் இருந்தது. இந்த ஆவணங்களை சிவப்பிரியா மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் யாரிடமாவது கொடுத்து அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்து இருக்கலாம். சிவப்பிரியா வழக்கில் சிக்கி கைதாகிவிட்டதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர்கள் அந்த ஆவணங்களை ஒரு பையில் போட்டு சாலை ஓரம் வீசிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த ஆவணங்கள் வழக்கு விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்கள் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story