மாநில செய்திகள்

அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்- முதல்வர் + "||" + All parties We have to strive to establish the rights of Tamil Nadu Edappadi Palaniasamy

அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்- முதல்வர்

அனைத்து கட்சியினரும்  தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்- முதல்வர்
அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் #CauveryIssue #AllPartyMeet #EdappadiPalanisamy
சென்னை

காவிரி நடுவர் மன்றம்  பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது.

இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

பின்னர் கடந்த 19-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.

அதன் படி  இன்று  கூடிய அனைத்து கட்சி   கூட்டத்திற்கு  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில்  தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன்,திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வாசன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன், சரத்குமார், கருணாஸ்,செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி,
கதிரவன், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடக்க உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக எனது அழைப்பினை ஏற்று இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள தங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காவேரி நதிநீர் போன்ற முக்கியமான எந்த ஒரு பிரச்சனை ஆனாலும், அதன்மீது பல்வேறு கருத்து  வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும், இன்று முதல், அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓரணியில் திரண்டு, ஒருமித்த கருத்துடன் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபடவேண்டும் என்ற எனது விருப்பத்தை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 

காவேரி நதிநீர்ப் பிரச்சனை,  காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது.  

காலத்தின் அருமை கருதி, காவேரி பிரச்சனை வழக்கு குறித்த நிகழ்வுகளை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.

* 1983-தமிழ்நாடு காவேரி நீர் பாசன விவசாயிகள் விளை பொருள்கள் நல உரிமை பாதுகாப்பு சங்கம் நடுவர் மன்றம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. 
*  6.7.1986- மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடுவர் மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். 
*  18.11.1986-தமிழ்நாடு காவேரி நீர் பாசன விவசாய்கள் விளை பொருள்கள் நல உரிமை பாதுகாப்பு சங்கம் தொடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக்கொண்டது.

* 4.5.1990 - உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

*  4.6.1990-காவேரி நடுவர்மன்றம் மத்திய அரசு  அமைத்தது.

* ஜூலை 1990 -தமிழ்நாடு அரசும் பாண்டிச்சேரி அரசும் இடைக்கால ஆணை வழங்க கோரி நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தன.  
* 25.6.1991-நடுவர்மன்றம் இடைக்கால ஆணையை பிறப்பித்தது. இதில், கர்நாடகா, தமிழ் நாட்டிற்கு மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் 205 டிஎம்சி அடி நீர் மாதாந்திர/வாராந்திர அடிப்படையில் அளிக்க ஆணையிட்டது.

* 25.7.1991-கர்நாடக அரசு நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல் இழக்கும் விதமாக ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது.

* 27.7.1991-குடியரசுத்தலைவர் கர்நாடகத்தின் அவசர சட்டத்தை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரினார்.

* 22.11.1991-உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் அவசர சட்டம் செல்லாது எனவும், காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் எனவும் கருத்துரு வழங்கியது. 
* 10.12.1991-நடுவர் மன்ற இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.  
* 1992-நடுவர் மன்ற இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பினை அமைக்க மத்திய அரசுக்கு ஆணையிடக்கோரி தமிழ்நாடு அரசு ஒரு அசல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
* ஜூலை 1993-நடுவர் மன்ற இடைக்கால ஆணையை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இதனை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் உண்ணா விரதம் மேற்கொண்டார்.  மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் உத்திரவாதத்தினை ஏற்று மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

* 11.8.1998-மத்திய அரசு இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கு காவேரி நீர் ஆணையம் மற்றும் காவேரி கண்காணிப்பு குழு அமைத்து ஆணையிட்டது.

* 5.2.2007 -நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை பிறப்பித்தது. 
* 19.2.2007, 15.4.2007-நடுவர் மன்ற இறுதி ஆணை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நடுவர் மன்ற ஆணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.   இந்த சிவில் மனுவில், தமிழ்நாட்டின் பாசன பரப்பை  29 லட்சம் ஏக்கரிலிருந்து 24.71 லட்சமாக குறைக்கப்பட்டதை மீண்டும் அனுமதிக்கவும், தமிழ்நாட்டின் நீர் தேவையை 72 டிஎம்சி அடி கூடுதலாக அளிக்கவும் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.

* ஏப்ரல், மே 2007- நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மீது கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. 

நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கு செயல்வடிவம் கொடுக்க, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கு செயல்வடிவம் கொடுக்க, அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும்.

* 17.10.2011 21.3.2012-மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், மே 2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன.

* 17.4.2012-இந்த கடிதங்களின் மேல் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஒரு இடைக்கால மனுவை அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
* 4.2.2013-உச்சநீதிமன்றம், நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை 20.2.2013க்குள் மத்திய அரசிதழில் வெயிட ஆணையிட்டது.

* 19.2.2013-மத்திய அரசு, நடுவர்மன்றத்தின் இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட்டது. அம்மா அரசு தொடர் முயற்சி எடுத்ததனால், 5.2.2007 அன்று பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013 அன்று செயலாக்கத்திற்கு வந்தது. 
* 22.2.2013 11.3.2013 17.5.2013- நடுவர்மன்றத்தில் இறுதி ஆணையின் பரிந்துரையின்படி, காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க, பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. இவ்வமைப்புகளை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
* 18.3.2013-இதற்கிடையே, காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவை அம்மாவின் அரசு தாக்கல் செய்தது.

* 11.11.2013-காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் ஒரு இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

* 13.6.2014 25.4.2015-பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன.  
 
* 6.6.2014 7.8.2015 14.6.2016 27.2.2017 -பாரத பிரதமர் அவர்களுக்கு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

* 5.12.2014 27.3.2015 -தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பாரத பிரதமர் அவர்களுக்கு அனுப்பப்பட்டன.   
* 20.9.2016 -தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இவ்வமைப்புகளை உடன் அமைக்க ஆணை வேண்டியதன் பேரில் 20.09.2016 அன்று காவேரி மேலாண்மை வாரியத்தை நடுவர்மன்ற இறுதி ஆணையில் பரிந்துரைத்தபடி நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு ஆணையிட்டது.

* 30.9.2016-உச்சநீதிமன்றம் இதை மீண்டும் உறுதி செய்து 4 நாட்களுக்குள் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டுமென ஆணையிட்டது. 
 
* 3.10.2016-எனினும், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த  ஆணைகளை மாற்றியமைக்கும்படி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  இம்மனு 04.10.2016 அன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஒத்திவைத்து ஆணையிட்டது. 
 
* 19.12.2016 27.02.2017-மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பாரதப் பிரதமர் அவர்களிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது. 
* 9.12.2016 -இதற்கிடையே மாநிலங்கள் தாக்கல் செய்த சிவில் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உகந்தவை என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.   

* 16.2.2018-சிவில் வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் இவ்வமைப்புகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
 வருகை தந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாதக பாதகங்கள் குறித்து தங்களின் மேலான ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  தாங்கள் கூறும் ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
2. டிச.4 ஆம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின்
மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
3. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
5. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரளா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.