வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் என்ஜினீயர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்


வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் என்ஜினீயர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:00 PM GMT (Updated: 22 Feb 2018 7:13 PM GMT)

வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த பெண் என்ஜினீயர் லாவண்யா, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

ஆலந்தூர்,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தாழம்பூரில் தங்கி, நாவலூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் லாவண்யா, வேலை முடிந்து தனது விடுதிக்கு மொபட்டில் சென்றபோது, ஒட்டியம்பாக்கம் அரசன்கழனி-காரணை சாலையில் கொள்ளையர்கள் அவரை கத்தியால் தாக்கி நகைகள், செல்போன்கள், மடிக்கணினி மற்றும் மொபட்டை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த லாவண்யா, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் என்ஜினீயர் லாவண்யா, சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவர், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாய்பாபா சிலையை வணங்கினார்.

பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த லாவண்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவை சேர்ந்த பெண் என்பதால் என்னை யாரும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமின்றி, அனைத்து பெண்களும் எப்போதும் எச்சரிக்கையாகவும், சாதூர்யமாகவும் இருக்க வேண்டும்.

என்னை நேரில் சந்தித்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்வில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். தமிழக காவல்துறையினர் என்னை ஒரு சகோதரியாக பாவித்தனர். எனக்கு 2-வது வாழ்க்கை கிடைத்து உள்ளது. இன்னும் 10 நாட்களில் முழுமையாக குணமடைந்து பணிக்கு செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story