காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒற்றுமையுடன் செயல்பட்ட கட்சிகள் தலைவர்கள் பாராட்டு


காவிரி நதிநீர் பிரச்சினையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒற்றுமையுடன் செயல்பட்ட கட்சிகள் தலைவர்கள் பாராட்டு
x
தினத்தந்தி 22 Feb 2018 11:00 PM GMT (Updated: 22 Feb 2018 7:33 PM GMT)

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டதாக அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டதாக அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அரசால் அழைக்கப்பட்ட கட்சியினர் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் விவரம் வருமாறு:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன்; பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்; திராவிடர் கழக தலைவர் வீரமணி, கலிபூங்குன்றன்; தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி;

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி; ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ; தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன்;

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார்; சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன்;

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா; மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி; புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி; கொங்குநாடு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ்,; பார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன்; இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன்; தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்;

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி; புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 39 கட்சிகளை சேர்ந்தவர்கள் அழைக் கப்பட்டு இருந்தனர்.

மேலும் பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் சத்திய நாராயணன், ரங்கநாதன், பி.ஆர்.பாண்டியன், அய்யாக் கண்ணு, தெய்வசிகாமணி, வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட 14 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அரசியல் கட்சித்தலைவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- காவிரி விவகாரம் தொடர்பாக உடனடியாக உரிய தீர்வு காணவேண்டும் என்று தி.மு.க. சார்பில் நான் எடுத் துரைத்தேன். முக்கியமாக, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு ஏற்கனவே ஒருவாரம் கடந்துவிட்டது.

இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களில் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு உடனடியாக அழைத்துச்சென்று, பிரதமரை சந்தித்து, அவரை உடனே இதில் தலையிட்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தெரிவித்தேன்.

அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரும் அதை வழிமொழிந்து பேசியதையடுத்து, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, காவிரி விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை எல்லாம், சட்ட வல்லுனர்களோடு இந்த அரசு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டோம். அதையும் அரசு ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ்:-) தற்போது பங்கேற்ற அனைத்து தலைவர்களையும் அழைத்துச்சென்று டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினால் காங்கிரஸ் பங்கேற்கத் தயாராக உள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா:-) நமக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைக்கும் 177.25 டி.எம்.சி. நீரை முறையாக தமிழக அரசு கேட்டுப் பெறவேண்டும். இதற்கு முன் 50 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வந்தது. தற்போது கிடைக்கும் நீரை வலியுறுத்தி பெற தமிழக அரசுக்கு, தமிழக பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவாதம் இந்தத் தீர்ப்பில் இல்லை. எனவேதான் அந்த வாரியத்தை உடனே அமைக்க பிரதமரை சந்தித்து வற்புறுத்தும்படி கோரப்பட்டுள்ளது.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):- அவசரம், அவசியமான நேரத்தில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழகம் ஒற்றுமையாக ஒரே குரலில் கருத்துகளை கூறினர்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):- பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு அனைத்துக்கட்சி தலைவர்களை அழைத்துப் பேசுகிறது. தங்களுக்குள் இருக்கும் அரசியல் மனமாச்சரியங்கள், வேறுபாடுகளைக் கடந்து மனம்விட்டு, கூட்டத்திலும் உணவு நேரத்திலும் பேசிக் கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் ‘ஸ்கீம்’ அமைக்க வேண்டும் என்றுதான் உள்ளதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. எனவே இதை பயன்படுத்தி மத்திய அரசு, பன்மாநில நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒரு சட்ட வரைவை கொண்டு வந்து அதைத்தான் நடைமுறைப்படுத்த இருக்கின்றனர். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி):- தமிழக மக்களின் பிரச்சினையை காலை முதல் முடியும் வரை இருந்து நிதானமாக கேட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி. மக்களின் பிரச்சினைக்காக காலை முதல் மாலை வரை அனைத்து கட்சிகளும் சிறந்த ஒற்றுமையோடு இருந்தது பாராட்டுக்கு உரியது.

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்):- டெல்டா மாவட்ட விவசாயிகள் இழந்த உரிமைகளை மீட்கக் கூடிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கும், பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்படும். நிச்சயமாக விவசாயிகளுக்கு இது நம்பிக்கை தரும்.

பாலகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு):- ஆணையத்தை அமைக்கவும், உரிமையைப் பெறவும் நடவடிக்கை எடுக்க அரசை வற்புறுத்தியுள்ளோம். பிரதமரை பார்ப்பதாலே, அதுவும் இப்போது இருக்கிற பிரதமர் உடனே சாதகமாக செயல்படமாட்டார்.

காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்த சூழலில் கமல்ஹாசன் கூறியிருப்பது பொருத்தமாக அமையாது. தமிழக நலன் காவு கொடுக்கப்பட்டுவிடும்.

ஜி.கே.மணி (பா.ம.க.):- தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு 171 டி.எம்.சி. நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்):- காவிரிக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது வெற்றி கிடைத்தது. அதுபோல முதல்-அமைச்சரும், டெல்லியில் பிரதமர் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story