தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2018 11:00 PM GMT (Updated: 24 Feb 2018 6:52 PM GMT)

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

வண்டலூர்,

61-வது அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டி தொடக்க விழா வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் கவர்னர் பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது தேச விரோத சக்திகளும், சமூக விரோத சக்திகளும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதனை ஒடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், நெடுஞ்சாலை ரோந்து வாகனம், சிறப்பு இளைஞர் படை, கடலோர காவல் படை, ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் குற்ற நடவடிக்கை செயல்களை தடுத்து தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதில் பெண் கமாண்டோ படை சிறப்பு வாய்ந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து கவர்னர் அகில இந்திய காவல் பணி போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்து புறாக்களை பறக்கவிட்டு 61-வது அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியின் நிறைவு விழா 28-ந் தேதி நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி பதக்கங்களும், பரிசுகளையும் வழங்குகிறார்.

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள், 7 காவல் படைகளை சேர்ந்த அணிகள் உள்பட 1400 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது தவிர மோப்ப சக்தியால் வெடி மருந்துகள், போதை பொருட்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டு அறியும், 123 மோப்ப நாய்கள் போட்டியில் பங்கேற்கிறது.

இந்த திறனாய்வு போட்டியில் அறிவியல் சார்ந்த புலனாய்வு, கணினி திறன், நாசவேலை தடுப்பு, புகைப்படத் திறன், ஒலி, ஒளி படத்திறன், மோப்ப நாய்கள் ஆணைக்கு கட்டுப்படுத்தல் மற்றும் உடல் திறன் ஆகிய 6 தலைப்புகளில் 20 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

நேற்று நடந்த தொடக்க விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Next Story