தொண்டர்கள் கரை வேட்டி கட்டக்கூடாது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் உத்தரவு


தொண்டர்கள் கரை வேட்டி கட்டக்கூடாது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2018 10:30 PM GMT (Updated: 24 Feb 2018 6:57 PM GMT)

மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கரை வேட்டி கட்டக்கூடாது என்று கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அந்த கட்சிக்கு உயர்மட்டக்குழுவினர், மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கமல்ஹாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் என 90 பேர் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடந்தது.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாக நிர்வாகிகள் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்க விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றதற்கு ஏற்பாடுகள் செய்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்சியின் கொள்கைகளையும் அவர்களிடம் விளக்கவேண்டும். அதிகப்படியான உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்று கட்சி கொடிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே ஏற்றி வைக்கவேண்டும். கண்ணியமான முறையில் மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் நம்முடைய அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் நிலையங்களுக்கு அனுமதி பெறுவதற்காக வக்கீல் அணி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் தான் அனுமதி வாங்கவேண்டும் தவிர, வேறு யாரும் அனுமதி வாங்குவதற்காக போலீஸ்நிலைய படிகள் ஏறக்கூடாது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்ற அரசியல் கட்சியினரை போன்று கரை வேட்டி அணிய கூடாது. கட்சி தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்றவேண்டும். தொண்டர்களிடையே சண்டை, சச்சரவு என்று எந்த புகாரும் தலைமைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசியதாக அவர்கள் கூறினர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசி இருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story