அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்


அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்
x
தினத்தந்தி 26 Feb 2018 12:00 AM GMT (Updated: 25 Feb 2018 10:26 PM GMT)

காவிரி விவகாரம் குறித்து டெல்லி சென்று பிரதமரை விரைவில் சந்திக்க இருப்பதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து மத்திய மந்திரியிடம் தெரிவித்தேன். சட்டப்படி தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

நேரம் கிடைத்த உடன் பிரதமரையும், டெல்லியில் வைத்து நீர்வளத்துறை மந்திரியையும் நேரில் சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வலியுறுத்துவோம்.

மத்திய மந்திரி தமிழகத்துக்கு பல புதிய சாலை திட்டங்களை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற நிலைமையை எடுத்து சொன்ன உடன் பிரதமரிடம் அனுமதி பெற்று, தமிழகத்துக்கு தேவையான சாலைகள் அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்தார். அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கரூர்–கோவை, மேலூர்–திருப்பத்தூர்–புதுக்கோட்டை–தஞ்சாவூர் வழித்தடம், கும்பகோணம்–சீர்காழி, மகாபலிபுரம்–புதுச்சேரி பசுமை வழிச்சாலைகள், மதுரை–தனுஷ்கோடி 4 வழிச்சாலை, சேலம்–சென்னை பசுமை வழிச்சாலை என பல்வேறு திட்டங்களை உறுதிப்படுத்தி, சிறப்பான சாலை வசதிகளை மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார். இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ந்து வருகின்ற, தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

ஏற்கனவே இருந்த திட்டம் வளைந்து, வளைந்து செல்கிறது. ஆனால் சேலம்–சென்னை பசுமை வழித்தடம் திட்டத்தின்படி வழித்தடம் நேராக செல்வதால் தூரம் மற்றும் பயண நேரம் குறையும். வளைந்து, வளைந்து செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கிறது. புதிய திட்டத்தினால் 60 கி.மீ. தூரம் குறைவதோடு, எரிபொருள், நேரம் மிச்சமாகிறது.

சேலத்தில் இருந்து துரிதமாக தலைநகரான சென்னைக்கு வருவதற்கு இந்த திட்டம் அருமையான திட்டம். சேலம், கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களில் பஸ் போர்ட்(ஏர்போர்ட் போன்று சொகுசு வசதிகள் அடங்கியது) அமைக்கப்படும். அதற்காக சேலம், கோவையில் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்க இருக்கிறது. நாகர்கோவிலில் 12 ஏக்கர் இடம் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அதையும் பார்வையிட்டு, விரைவாக எடுத்து 4 இடங்களிலும் மத்திய அரசு பஸ் போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய திட்டங்களினால் அச்சம் ஏற்படுவது இயற்கை. மத்திய–மாநில அரசுகள் இணைந்து எடுத்துக்கூறி அந்த அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மிகப்பெரிய துறைமுகம் வர இருக்கிறது. தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருக்கிறது. இதனை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனுப்புங்கள் பரிசீலித்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, சென்னை–புதுச்சேரி இடையே விரைவில் கப்பல் போக்குவரத்துத் தொடங்க உள்ளது. பரிசாட்த்த முறையில் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு கப்பல் இயக்கப்பட்டுள்ளது. 100 கண்டெய்னர்களை கொண்டு செல்லும் வகையில், 5 லட்சம் டன் எடையை தாங்க கூடிய வகையில் கப்பல் இருக்கும்.’ என்றார்.


Next Story