மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு


மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:47 PM GMT (Updated: 25 Feb 2018 10:47 PM GMT)

பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதால் விமர்சனங்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு, கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இதையடுத்து 16 பேர் அடங்கிய உயர் மட்டக்குழுவினர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக www.ma-i-am.com என்ற இணையதளத்தை கமல்ஹாசன் தொடங்கினார். கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார்.

அதேசமயத்தில் கிராமங்களில் இருக்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கட்சியில் உறுப்பினராக சேருவதில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான காகித படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படிவங்கள் ஓரிரு தினங்களில், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழுவினர், மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்களுக்கு கமல்ஹாசன் அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொள்கைகள் குறித்து பிற அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூறும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை யாரும் பொருட்படுத்தவேண்டாம்.

தங்களது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவேண்டும். இதேபோல, மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழுவில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த அகில இந்திய பொறுப்பாளரான தங்கவேலு ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். உயர் மட்டக்குழுவில் நற்பணி இயக்கத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த மேலும் சில மூத்த நிர்வாகிகளை சேர்க்கவேண்டும் என்று கட்சி தலைமைக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

மதுரையில் பொதுக்கூட்ட மேடையில் அந்த மாவட்ட பொறுப்பாளருக்கே இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அவர்கள் ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்ட மேடையில் இருக்கை ஒதுக்கீடு செய்யவேண்டும். பல வருடங்களாக கமல்ஹாசனின் நிழலாக இருந்து வரும் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் குறைந்தது 5 பேரையாவது கட்சியின் உயர்மட்டக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக, தலைமையில் இருந்து அடுத்தடுத்து எங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக நாங்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பெருவாரியான உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story