மாநில செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம்: ‘இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு’ + "||" + Actress Sridevi's death: The Indian film industry is a huge loss

நடிகை ஸ்ரீதேவி மரணம்: ‘இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு’

நடிகை ஸ்ரீதேவி மரணம்: ‘இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு’
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாகும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். திரைப்பட நடிகை ஸ்ரீதேவி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.


நடிப்பில் பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் நடித்த ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘பிரியா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பு திறமைக்கு சான்றாகும்.

ஸ்ரீதேவி தனது நடிப்புத்திறமைக்காக பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், சுமார் 50 ஆண்டு காலமாக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும்.

ஸ்ரீதேவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மூத்த, பன்முகத்தன்மை கொண்ட, ஒரு துடிப்பான நடிகையாக இந்திய திரையுலகில் வலம்வந்த நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். அவரது அப்பழுக்கற்ற வாழ்க்கையும், அபார நடிப்புத்திறனும் இந்த தலைமுறையினரையும் ஈர்த்து இருக்கிறது. சாதனை மற்றும் புகழுக்கும் சொந்தமான நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.