மாநில செய்திகள்

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம் + "||" + The green route of Rs.10,000 crores between Chennai and Salem

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம்

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம்
ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.
சென்னை,

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை மந்திரி நிதின் கட்காரி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடைபெற்றது.


இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 9.30 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

* காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை விரைவாக அமைக்க வேண்டும்.

* கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவிரி என அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

* சேலம் நகரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சேலம் மற்றும் சென்னை நகரங்களுக்கு இடையே பசுமை வழித்தடம் அமைக்கவேண்டும்.

* பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே பசுமை வழித்தடத்தையும் சேர்க்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கூட்டம் முடிந்தவுடன் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

‘ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே 8 தடங்கள் வழியாக பசுமை வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பயணம் நேரம் 2 மணி நேரம் குறையும். மும்பை-புனே இடையே மட்டும் தற்போது பசுமை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை-பெங்களூரூ விரைவுவழிதடத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.’

தமிழகமும், கர்நாடகவும் இந்தியாவின் 2 கண்கள். இரு மாநிலங்களின் தண்ணீர் தேவை பற்றி மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே காவிரி விவகாரத்தில் இரு மாநில நலன்களும் பாதுகாக்கப்படும். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.