தேசிய செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் + "||" + Actress Sridevi is dead : President, the Prime Minister has expressed condolences

நடிகை ஸ்ரீதேவி மரணம் : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIPSridevi #Sridevi
மும்பை,

தமிழ்நாட்டில் சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, இந்திய திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி (வயது 54).

பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் சகோதரரும், பட அதிபருமான போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் குடியேறினார். இந்த தம்பதியருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள் உள்ளனர்.


4 வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழி படங்களிலும் 300-க் கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக ஸ்ரீதேவி அங்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.

இரவு திருமண விழாவில் ஸ்ரீதேவி உற்சாகத்துடன் கலந்து கொண்டார். உறவினர்களுடன் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

திருமண விழா முடிந்ததும், ஸ்ரீதேவி தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிந்தார். அப்போது இரவு 11 மணி. அவரை உடனடியாக துபாய் அரசு ராஷித் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரடைப்பால் ஏற்கனவே ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

மண விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்த நிலையில் ஸ்ரீதேவியின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினரை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது. கணவர் போனி கபூரும், மகள் குஷியும், குடும்ப உறுப்பினர்களும் கதறி அழுதனர்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த தகவல் உடனே மும்பைக்கு தெரிய வந்தது. அது மின்னல் வேகத்தில் டி.வி. சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவியது. ஆனால் முதலில் யாருமே அதை நம்பவில்லை. இது வதந்தியாக இருக்கக்கூடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், அவர் மரணம் அடைந்து விட்டார் என்பதை துபாயில் இருந்த போனிகபூரின் தம்பி சஞ்சய் கபூர் உறுதி செய்தார். அதன்பிறகே அனைவரும் நம்பினர். அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள பட உலகினர் சமூக ஊடகங்களில் இரங்கல் செய்திகளை பதிவு செய்தனர்.

மும்பை லோகந்த்வாலா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவியின் வீட்டுக்கு ரசிகர் கள் நேற்று அதிகாலை முதல் படையெடுக்கத் தொடங்கினர். போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

50 ஆண்டுகள் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்ரீதேவியின் மரணம், இந்திய பட உலகையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளில் துபாயில் உள்ள இந்திய தூதரகம், துபாய் அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டது. ஸ்ரீதேவி குடும்பத்தினருடன் தூதரக அதிகாரி உடன் இருந்து தேவையான உதவிகளை செய்தார்.

ஸ்ரீதேவியின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதும் மும்பைக்கு தனி விமானத்தில் எடுத்துவர குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் அவர், “நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்குவதாகவும் இருக்கிறது. ‘மூன்றாம் பிறை’, ‘லாம்ஹே’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு மற்ற நடிகர்களுக்கு உந்துதலாக அமைந்தது. அவர் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது திரையுலக வாழ்க்கை நெடியது. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பு திறமையை வெளிப் படுத்தி இருந்தார். ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி, அய்யப்பன்-ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக 1963-ம் ஆண்டு, ஆகஸ்டு 13-ந்தேதி பிறந்தவர். 4 வயதிலேயே ‘துணைவன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1976-ம் ஆண்டு கே.பாலசந்தர், தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘16 வயதினிலே’, ஜானி, வறுமையின் நிறம் சிகப்பு, நான் அடிமை இல்லை, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருடனும் அவர் ஜோடி சேர்ந்த படங்கள் அத்தனையும் அபார வெற்றி பெற்றன. தமிழில் கடைசியாக நடிகர் விஜய் நடித்து சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்திய திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு, 2013-ம் ஆண்டு, மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.