நடிகர் பார்த்திபன் மகள் திருமணம் எடப்பாடி பழனிசாமி-ரஜினிகாந்த் வாழ்த்து


நடிகர் பார்த்திபன் மகள் திருமணம் எடப்பாடி பழனிசாமி-ரஜினிகாந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 8 March 2018 10:00 PM GMT (Updated: 8 March 2018 8:44 PM GMT)

நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் மகள் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. #ActorParthiban #Rajinikanth

சென்னை, 

நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் மகள் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்-டைரக்டர் ஆர்.பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியின் இளைய மகள், கீர்த்தனா. மணிரத்னம் டைரக்டு செய்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற இவர், சென்னை லயோலா கல்லூரியில், ‘விஸ்காம்’ படித்து பட்டதாரி ஆனார். அதன் பிறகு, டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், லயோலா கல்லூரியில் ‘விஸ்காம்’ படித்த அக்‌ஷய் அக்னினேனிக்கும் காதல் மலர்ந்தது. அக்‌ஷய், பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத்தின் மகன் ஆவார். கீர்த்தனா-அக்‌ஷய் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள்.

அதைத்தொடர்ந்து கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. திருமண நிகழ்ச்சிகள், வைதீக முறைப்படி நடந்தன. கீர்த்தனா கழுத்தில் அக்‌ஷய் தாலி கட்டினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, சரத் குமார்-ராதிகா சரத்குமார், டைரக்டர் மணிரத்னம்-சுஹாசினி, நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, விக்ரம் பிரபு, விவேக், நடிகைகள் ஸ்ரீப்ரியா, குஷ்பு, மீனா, சுகன்யா, குட்டி பத்மினி, டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், பாலா, லிங்குசாமி, ஆர்.வி.உதயகுமார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், அறிவழகன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், கவிஞர் வைரமுத்து, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, டி.சிவா, மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் வரவேற்றார்கள்.

Next Story