திருச்செந்தூர் கோவிலில் அய்யாக்கண்ணுவை பா.ஜனதா பெண் நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு


திருச்செந்தூர் கோவிலில் அய்யாக்கண்ணுவை பா.ஜனதா பெண் நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 8:47 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துண்டுபிரசுரம் வினியோகித்த அய்யாக்கண்ணுவை பா.ஜனதா பெண் நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துண்டுபிரசுரம் வினியோகித்த அய்யாக்கண்ணுவை பா.ஜனதா பெண் நிர்வாகி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 1-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர்.

8-வது நாளாக நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர்கள் மதியம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் கோரிக்கை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த திருச்செந்தூரை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் (வயது 43) பக்தர்களிடம், ‘துண்டுபிரசுரங்களை வாங்காதீர்கள், இது ஏமாற்று வேலை’ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் நெல்லையம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் நெல்லையம்மாள் அய்யாக்கண்ணுவின் முகத்தில் கையால் தாக்கியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை தாக்க முயன்றனர். உடனே அருகில் இருந்த பக்தர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நெல்லையம்மாள் தனது செருப்பை எடுத்து காண்பித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காயம் அடைந்த நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story