மாநில செய்திகள்

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் சைவ சித்தாந்த கருத்துக்களை பின்பற்றுகிறார்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் + "||" + The governor Panwarilal Purohit follows the concept of Saiva ideology

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் சைவ சித்தாந்த கருத்துக்களை பின்பற்றுகிறார்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் சைவ சித்தாந்த கருத்துக்களை பின்பற்றுகிறார்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் சைவ சித்தாந்த கருத்துக்களை பின்பற்றுகிறார்கள் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை, 

மயிலாடுதுறை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி தமிழ்த்துறை சார்பில் சைவமும், தமிழும் தழைத்து ஓங்குவதற்காக 5-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு வைஷ்ணவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. இலங்கையை சேர்ந்த சி.தனபாலா, நந்திக்கொடி ஏற்றினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டு மலரை வெளியிட்டார். அதை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி பெற்றுக்கொண்டார்.

கருத்தரங்கு மலரை கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் தலைவர் டத்தோ ஆர்.நடராஜா வெளியிட, வைஷ்ணவ கல்லூரி செயலாளர் அசோக்குமார் முந்த்ரா பெற்றுக்கொண்டார். திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசுகையில், ‘தருமபுரத்தில் மெய்கண்டார் தத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்பட இருப்பதற்கு முன்னோட்டமாக இந்த அனைத்துலக மாநாடு நடத்தப்படுகிறது’ என்றார்.

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் அடங்கியது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்த கொள்கைகள் இந்தியா மட்டும் அல்லாது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் பின்பற்றி வருகின்றனர். தொடர்ந்து உலகம் முழுவதும் சைவ சித்தாந்த கருத்துகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

விவேகானந்தரின் சீடர் நிவேதிதையை பார்க்க சென்ற பாரதியாரிடம், ‘ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை’ என்று கேட்டுள்ளார். எங்கள் நாட்டில் பெண்களை வெளியே அழைத்து செல்லும் பழக்கம் இல்லை என்று பாரதியார் கூறினார். பெண்கள் முன்னேற்றத்தில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கும். எனவே பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று நிவேதிதை கூறினார். இதனை தொடர்ந்து ‘புதுமைப்பெண்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்கள் முன்னேற்றம் குறித்து பாடல்களை பாரதியார் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தருமை ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசுகையில், இருளும், ஒளியும் அம்மையப்பனாக இருந்து நம்மை வழிநடத்துகிறார்கள். இதில் ஒளி சிவபெருமானாகவும், இருள் பராசக்தியாகவும் இருந்து நம்மை காத்து வருகின்றனர். பொதுவாக வாழை இலையின் அடிப்பாகம் மென்மையாகவும், வலப்பாகம் சற்று கடினமாக இருக்கும். மென்மையான பாகம் உள்ளே சுருண்டு இளம் தளிர் நிலத்தில் காணப்படும். அதேபோல் மென்மையான பெண்களை வலிமையான ஆண்கள் பாதுகாத்து போற்ற வேண்டும் என்றார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி பேசும்போது, ‘இந்த கல்வி ஆண்டு முதல், இப்பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., சைவ சித்தாந்தம் என்ற சிறப்பு பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 20 அல்லது 30 தொடர் வகுப்புகள் நடத்தப்படும். மீதம் உள்ள நாட்களில் வீடுகளில் இருந்தே படித்து பட்டம் பெறலாம்’ என்றார்.

தொடர்ந்து நடந்த உரையரங்கத்தில் வேதம், ஆகமம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை பேராசிரியர் நல்லூர் சரவணன், கல்லூரி முதல்வர் கு.சுதாகர், மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடம் பாலயோகி சுவாமிகள் உள்ளிட்ட பலர் பேசினர்.

அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன கவுரவ இயக்குனர் டி.என்.ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, மலேசியா தொழில் அதிபர் ஜி.கலைச்செல்வன், லண்டனை சேர்ந்த மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நடராஜா சச்சிதானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டு செயலாளர் இரா.செல்வநாயகம் வரவேற்றார். எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உமா மகேஷ்வரி உள்பட பலர் செய்திருந்தனர்.

தொடர்ந்து 11-ந்தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கருத்தாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்க உள்ளனர்.