குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் சிலர் காயம், மீட்புப் பணியில் சிக்கல்


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் சிலர் காயம், மீட்புப் பணியில் சிக்கல்
x
தினத்தந்தி 11 March 2018 12:48 PM GMT (Updated: 11 March 2018 5:19 PM GMT)

குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவ, மாணவியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #KuranganiForestFire


தேனி,


தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் போடியில் இருந்து கொழுக்குமலை வழியாக கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவியர்கள் 40 பேர் குரங்கணி சென்று உள்ளனர். குரங்கணியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக டாப்ஸ்டேசன் நோக்கி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் சுற்றுலா பயணிகளும் அங்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர். இந்தநிலையில் திடீரென வனப்பகுதியில் காட்டுத் தீ எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீ மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை சூழ்ந்து கொண்டது. நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டதால் அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.  

இதுதொடர்பாக வனத்துறையினருக்கு முதல்கட்டமாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ குறித்து தகவல் தெரிந்ததும் மீட்பு பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வனத்துறை, தீயணைப்புத்துறை காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிக்கு சென்றது. உள்ளூர் மக்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் நபர்கள், அப்பகுதியை நன்றாக அறிந்தவர்கள் என அனைவரும் மீட்பு பணியை தொடங்கினர்.  நேரம் செல்ல, செல்ல தீயின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்தது. மாணவ - மாணவியர்களை மலையின் மேல் பகுதியை நோக்கி சென்ற நிலையில் கீழ் பகுதியில் தீ எற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் வனப்பகுதியில் மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே விமானப்படை உதவி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க உதவுமாறு விமானப்படைக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். 
 
இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் போடி வனப்பகுதிக்கு விரைந்து உள்ளது. முதல்கட்டமாக அங்கிருந்து 7 மாணவிகள் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்படுபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 15 மாணவிகள் வரையில் மீட்கப்பட்டு உள்ளனர் என நிர்மலா சீதாராமன் கூறிஉள்ளார். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே மீட்கப்படுவோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குரங்கணியில் ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. விமானப்படை தீயின் நிலை குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிலர் காயம் 

மலையில் மீட்கப்பட்டு அடிவாரத்துக்கு அழைத்துவரப்பட்ட 8 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட மாணவிகளில் சிலர் காயம் அடைந்து உள்ளனர் என்று அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீக்காயம் அடைந்தவர்கள் டோலி மூலம் மலையின் கீழ் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறார்கள். இதற்கிடையே 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கிஉள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. சிக்கியவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற போராட்டத்தில் அனைத்து தரப்பும் இறங்கி உள்ளது. 

காட்டுப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறிஉள்ளார். 


Next Story