தீயில் 36 பேர் சிக்கியது எப்படி? மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தகவல்


தீயில் 36 பேர் சிக்கியது எப்படி? மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 12 March 2018 11:30 PM GMT (Updated: 12 March 2018 9:24 PM GMT)

தீ விபத்தில் 36 பேர் சிக்கியது எப்படி? என்பது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி அதிர்ச்சியுடன் கூறினார்.

சென்னை, 

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 250 போலீசார் ஈடுபட்டனர். மீட்பு பணியின்போது நான் பார்த்த காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தீ எரியத் தொடங்கி இருக்கிறது. 10 அடி உயரத்துக்கு மேல் செழித்து வளர்ந்து காய்ந்து போன கோரைப்புல்கள் தான் கோரமாக கொழுந்துவிட்டு எரிய தொடங்கி இருக்கிறது.

பிற்பகல் 3 மணியளவில் தான் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து விடுமுறைக்கு வந்திருந்த ராணுவ வீரர் பாக்யராஜ் மலையில் ஏறி சென்று, தீயின் கோரக்காட்சிகளையும், அதில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும் நேரில் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் தலைமையில் 100 போலீசார் மலையில் ஏறினார்கள்.

அவர்களை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், பயிற்சி போலீஸ்காரர்கள் 100 பேரை அழைத்துக்கொண்டு தீப்பிடித்த குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றோம்.

உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். இரவு கடும் குளிராக இருந்தது. குளிரை சமாளிக்க ஆடை எதுவும் எடுத்து செல்லவில்லை. ‘டார்ச் லைட்’ விளக்கு வெளிச்சத்தில் தான் உயிருக்கு போராடியவர்களை மீட்டோம்.

கோவையில் இருந்து துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர்கள் டாக்டர்களோடு மலைக்கு வந்தனர். குரங்கணி ஊரின் பொதுமக்கள் மிகவும் பேருதவி செய்தனர். அவர்கள் தான் வழிகாட்டினார்கள்.

மலைவாழ் மக்களும் போலீசின் மீட்பு பணிக்கு துணையாக செயல்பட்டனர். அதிகாலை 3 மணிக்குள் உயிருக்கு போராடிய பெரும்பாலான பேரை மீட்டுக்கொண்டு வந்துவிட்டோம்.

காட்டுத்தீ கொடூரமாக எரிந்ததால் பயந்து போய், எங்கே செல்வது என்று தெரியாமல், தீயில் சிக்கியவர்கள் தவித்துள்ளனர். கோரைப்புல்களுக்கு நடுவில் வழி தெரியவில்லை. முறையாக வழிகாட்ட கூடிய வழிகாட்டிகள் யாரையும் இவர்கள் அழைத்து செல்லவில்லை.

வழிகாட்டியை அழைத்து சென்ற 10 பேர் மலையில் தீப்பிடிக்காத வழியாக தப்பி வந்து விட்டனர். வழிகாட்டிகளை அழைத்து சென்றிருந்தால், புகைமூட்டம் ஏற்படும் போதே பெரிய தீ விபத்து ஏற்பட போகிறது என்பதை உணர்ந்து தப்பி வந்திருப்பார்கள்.

தீயில் சிக்கியவர்கள் முதலில் புகைமூட்டம் ஏற்பட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிகப்பெரிய தீ நம்மை தாக்கப் போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.

கோரைப்புல்களுக்கு நடுவில் 40 அடி பள்ளம் உள்ளது. தீ எரிய தொடங்கியவுடன், தப்பி ஓடி வந்தவர்கள் அந்த பள்ளத்துக்குள் தடுமாறி விழுந்து விட்டனர். அவர்கள் தான் முதலில் பலியானவர்கள்.

காட்டுத்தீ கொடூரமான அரக்கனை போன்றது. அது மின்னல் வேகத்தில் எரிந்து பாய்ந்து வரும். அந்த வேகத்துக்கு இணையாக நம்மால் ஓட முடியாது. அவ்வாறு ஓட முடியாமல் தான் தீயில் சிக்கி இருக்கிறார்கள்.

காலை 6 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் வந்தவர்கள் தீயில் கருகி பலியான 9 பேரின் உடல்களை எடுத்து சென்றனர். நாங்கள் இறந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தால் மேலும் உயிர் பலி அதிகரித்து இருக்கும். எனவே தான் உயிருக்கு போராடியவர்களை முதலில் மீட்டோம்.

தீ பிழம்புக்கு நடுவே பல பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து உயிருக்கு போராடியபடி நின்றனர். எங்களைப் பார்த்த பிறகுதான் அவர்களுக்கு உயிரே வந்தது. எங்களை கையெடுத்து கும்பிட்டு நீங்கள் தான் தெய்வம் என்றார்கள்.

இரண்டு பேர் கட்டிப் பிடித்த நிலையில் உடல் கருகி பிணமாக கிடந்தனர். பலத்த காயத்துடன் போராடியவர்கள் தங்களது உறவினர்களுடைய செல்போன் எண்ணை சொல்லி தகவல் கொடுக்க சொன்னார்கள். நாங்கள் உடனடியாக அந்த செல்போன் எண்ணில் பேசி தகவல் கொடுத்தோம்.

மொத்தத்தில் குரங்கணி மலைப்பகுதியே அழுகுரலும், கூக்குரலும், அபயக்குரலும் ஒலித்த வண்ணம் இருந்தது. பல இடங்களில் பாறைகளுக்கு அடியில் இருந்து கூட எங்களை காப்பாற்றுங்கள் என்ற சத்தம் கேட்டது. உடனடியாக குரல் வந்த திசையில் இறங்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டோம். இந்த காட்சி மறக்க முடியாத கண்ணீர் காட்சிகளாக எங்கள் கண்ணில் பதிந்துள்ளது.

திண்டுக்கல், தேனி மலைப்பகுதியில் இது மிகவும் கொடூரமான விபத்து ஆகும். இதை ஒருபாடமாக அரசு எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இயற்கை எழில் சூழ்ந்த ராணி போன்று குரங்கணி மலைப்பகுதி காட்சி அளிக்கும். இந்த கொடூர தீயை எரியவிட்டு குரங்கணி மலையரசி ராட்சஷி போல காணப்பட்டாள்.

உயிர் பிழைத்தவர்கள் அந்த மலை மண்ணை கையெடுத்து கும்பிட்டு வணங்கி விட்டு சென்றனர். மீட்பு பணி திங்கட்கிழமை (நேற்று) காலை 11 மணிக்கு முடிந்தது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நேற்று ஓய்வு கொடுக்கப்பட்டது. 

Next Story