வனத்துறையிடம் அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றோம் - சென்னை டிரெக்கிங் கிளப்


வனத்துறையிடம் அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றோம் - சென்னை டிரெக்கிங் கிளப்
x
தினத்தந்தி 13 March 2018 10:10 AM GMT (Updated: 13 March 2018 1:31 PM GMT)

வனத்துறையிடம் அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றோம் என சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது. #KuranganiForestFire #ChennaiTrekkingClub

சென்னை,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது.  குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது.  சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வந்தன. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயம் அடைந்தவர்கள்  மதுரையில் உள்ள மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உரிய அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக புகார் எழுந்தது. இந்த தீ விபத்து ஏற்பட்டதும், டிரெக்கிங் குழுவை ஒருங்கிணைத்த நிறுவன உரிமையாளர் பீட்டர் தலைமறைவானார். 

குரங்கணி தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை டிரெக்கிங் கிளப் தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. டிரெக்கிங் கிளப் நிறுவன முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  ”குரங்கணி வனப்பகுதிக்குள் சென்ற போது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி எதுவும் இல்லை. வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுதான் குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றோம். வழிகாட்டிகள் அருண், விபின் ஆகியோர் டிரெக்கிங்கில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள்.

  குரங்கணி மலை அடிவாரத்தில், பருவகால சாகுபடிக்காக புற்களை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். குரங்கணி முதல் கொழுக்கு மலை வரை மலையேற்றம் செல்வது வழக்கமானது. போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது”  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story