‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை’ ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் பேட்டி


‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை’ ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2018 11:30 PM GMT (Updated: 13 March 2018 8:57 PM GMT)

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் கூறினார்.

டேராடூன்,

அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புக்கு பின்னர், முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும் ஆன்மிக குருக்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

15 நாட்கள் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்கு குகைகோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரிஷிகேஷ் பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் டேராடூனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் கூறியதாவது:-

நான் என்னுடைய கட்சி பெயரை அறிவிக்காததால், இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை.

தற்போது ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். எனவே அரசியல் பேசவேண்டிய களம் இது அல்ல. மனித வாழ்வின் நோக்கமே தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன்.

என்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் இறந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணம் அடைந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அரசு ஏதாவது செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story