தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை 3 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க திட்டம்


தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை 3 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க திட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 12:15 AM GMT (Updated: 15 March 2018 9:38 PM GMT)

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள், புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சென்னை,

தமிழக சட்டசபையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும், பற்றாக்குறை பட்ஜெட்டாகவே அமைந்தது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,76,251 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினம் ரூ.1,93,742 கோடி இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாக இருக்கும்.

மேலும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ளதால், வரிச் சலுகைகள் எதுவும் இந்த வரவு - செலவு திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை.

2018-2019-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் வணிக வரியின் மூலம் பெறப்படும் வருவாய் ரூ.86,859 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,12,616 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.11,301 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளுக்கான விரிவான வெள்ளத்தடுப்பு மேலாண்மைத் திட்டம் முறையே ரூ.2,055.67 கோடி மற்றும் ரூ.1,243.15 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசின் உதவியைப் பெறும் வகையில், ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் பதப்படுத்தும் பூங்காவினை கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையினை இந்த அரசு தயாரித்து வருகிறது.

* மக்கள் தங்களுக்குத் தொடர்பான தரவுத் தகவல்களைத் தாங்களே திருத்தம் செய்ய ஏதுவாக, ஒருங்கிணைந்த ‘தமிழ்நாடு மக்கள் இணையதளம்’ விரைவில் தொடங்கப்படும். அனைத்து அரசுத் துறைகளுக்குமான பொது மின்னாளுமை வடிவமைப்பு உருவாக்கப்பட்டு, அது விரையில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

* 2018-2019-ம் ஆண்டில், 3 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை ஏழைக் குடும்பங்களுக்கு இந்த அரசு இலவசமாக வழங்கும். நீர்வழிப் பாதை போன்ற ஆட்சேபத்திற்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த் துறையின் மூலமாக தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி, ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாவை இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

அவ்வாறு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ், விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டு வசதி வழங்கப்படும்.

* கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், இந்தப் பருவம் முதல் வருவாய்ப் பகிர்வு விலை நிர்ணய முறைக்கு மாற அரசு முடிவு செய்துள்ளது. இதனால், விவசாயிகள் நியாயமான மற்றும் ஆதாய விலை பெறுவதை உறுதி செய்வதுடன், கூடுதலாக சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் ஒரு பகிர்வும் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த மாற்றத்தினைக் கொண்டுவர, மெட்ரிக் டன் ஒன்றிற்கு, போக்குவரத்து செலவான ரூ.100-ஐ சர்க்கரை ஆலைகளே தொடர்ந்து ஏற்கும்.

போக்குவரத்து செலவுபோக, தற்போது விவசாயிகள் பெற்றுவரும் மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ.2,750-ஐ அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதிசெய்ய, புதிய வருவாய்ப் பகிர்வு முறையில் பெறப்படும் விலைக்கும், தற்போது பெற்று வரும் ரூ.2,750-க்கும் இடையேயான வித்தியாசத்தை, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக இந்த அரசு நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கும். 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை கட்டுமான அளவை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து ஒரு சிறப்புத் திட்டத்தினை வகுத்து, 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்தை 2018-2019-ம் ஆண்டில் அரசு செயல்படுத்தும்.

* ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக 60 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் பல நாட்கள் பயணம் செய்து மீன்பிடிப்பில் ஈடுபடும் நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக, மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகளை படிப்படியாக இந்த அரசு வழங்கும்.

* அத்திக்கடவு - அவினாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்பாசனத் திட்டத்தை ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த இந்த அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் காளிங்கராயன் அணையின் கீழ்ப்புறத்தில் இருந்து 1.5 டி.எம்.சி. அடி உபரி நீரினை நீரேற்றம் செய்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளங்கள் நிரப்பப்படும். இந்த பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. 

Next Story