நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்குமா? அமைச்சர் ஜெயக்குமார் பதில்


நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்குமா? அமைச்சர் ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 17 March 2018 12:15 AM GMT (Updated: 16 March 2018 9:51 PM GMT)

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்குமா?

சென்னை,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்குமா? என்பது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் நாங்கள் ஆட முடியாது. மாநிலத்தினுடைய உரிமையை அண்ணா வழியிலும், ஜெயலலிதா வழியிலும், எம்.ஜி.ஆர். வழியிலும் காப்போம். அதைத்தான் நம்முடைய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். நம்பிக்கை இல்லா தீர்மானம் யார் கொண்டுவருகிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், அதற்கு ஆதரவு தருவதா?, இல்லையா? என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியதாவது:-

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக தெலுங்கு தேசம் அறிவித்திருக்கிறது. தெலுங்கு தேசம் மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகிச் சென்றிருக்கிறது. அதற்கு ஆதரவாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி அ.தி.மு.க., எனவே, அ.தி.மு.க.வின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்று நாடு முழுவதும் ஒரு கேள்வி அலை எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உயர்மட்டக்குழு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றபோது, அதற்கான முடிவை அ.தி.மு.க. எடுக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வினர் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தினார்களா? என்று தெரியவில்லை. இப்போது குழப்பம் இல்லாமல் அ.தி.மு.க. அரசு செம்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த குழப்பத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. அரசு பீடுநடைபோட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story