கடை நடத்த விடாமல் இடையூறு: பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்


கடை நடத்த விடாமல் இடையூறு: பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 17 March 2018 8:15 PM GMT (Updated: 17 March 2018 8:15 PM GMT)

கடை நடத்த விடாமல் இடையூறு செய்த பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை சூளைமேடு அண்ணாநெடும்பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னார். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எனது சகோதரர் பிரின்ஸ், சூளைமேடு பகுதியில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அந்த கடையை, கடந்த 2012-ம் ஆண்டு எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த விஜயலட்சுமி சுவாரிசின் மகன் ராக்கி வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவர், வாடகையை முறையாக கொடுக்காததால் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் 2015-ம் ஆண்டு அவர் கடையை காலி செய்தார்.

இடையூறு

இதன்பின்பு, அந்த கடையை எனது சகோதரர் நடத்தி வந்தார். 15.2.2016 அன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சுவாரிஸ், அவரது கணவர் பெட்ரன்ட், மகன் ராக்கி ஆகியோர் குண்டர்கள் சிலருடன் கடைக்கு வந்து கடையை அடைக்கும்படியும், இல்லையென்றால் பொய் வழக்குப்பதிவு செய்து விடுவதாகவும் எனது சகோதரர் மற்றும் கடை உரிமையாளரை மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து செந்தில் ஆறுமுகம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவர் கடையை மூடிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எனது சகோதரர் மீண்டும் கடையை திறந்தார். இதை அறிந்த இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அவரது குடும்பத்தினர் குண்டர்களுடன் சேர்ந்து கடையை நடத்த விடாமல் இடையூறு செய்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனது அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ரூ.75 ஆயிரம் அபராதம்

இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்க வேண்டும். மனுதாரரின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை அரசு பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

மனுதாரரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார். 

Next Story