கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் 20-ந் தேதி பா.ம.க. போராட்டம்


கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் 20-ந் தேதி பா.ம.க. போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 8:30 PM GMT (Updated: 17 March 2018 8:20 PM GMT)

கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னையில் 20-ந் தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடக்கிறது.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், பாட்டாளி மாணவர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேலையில்லாப் பட்டதாரிகள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இளைஞர்களின் நலனுக்கு எதிரான இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

படித்து முடித்தவுடன் வேலை என்ற நிலை மாறி, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட நிலையில், அதற்கேற்றவாறு கல்விக்கடன் வசூல் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக அக்கடன்களை தனியாரிடம் விற்பனை செய்வது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

போராட்டம்

இத்தகைய நெருக்கடியான நிலையில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக மாநில அரசுக்கு அதிக பங்கு உண்டு. ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டு வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பா.ம.க., பாட்டாளி மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story