மாநில செய்திகள்

அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி திடீர் வருகை + "||" + Anna Arivalayam to Karunanidhi sudden visit

அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி திடீர் வருகை

அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி திடீர் வருகை
அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி நேற்று திடீரென வருகை தந்தார். தன்னுடைய அறையில் 10 நிமிடம் அமர்ந்திருந்த அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேநேரம், கருணாநிதியின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகும். அண்மையில் கருணாநிதி தன் கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்பில்’ வெளியானது.


இந்தநிலையில் கருணாநிதி நேற்று இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு, நேற்று இரவு 8.40 மணிக்கு அறிவாலயத்துக்கு தன்னுடைய காரில் கருணாநிதி வந்தார். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கருணாநிதியை வரவேற்றனர்.

அறிவாலயத்துக்குள் வந்ததும், கருணாநிதி மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்பட்டார். காரில் இருந்து சக்கர நாற்காலி மூலம், அறிவாலயத்தில் உள்ள தன்னுடைய அறைக்கு சென்றார். அங்கு 10 நிமிடம் இருந்தார். தன் அறையை சுற்றிப்பார்த்து, உற்சாகம் அடைந்த கருணாநிதி, பின்னர் அங்கிருந்து, புறப்பட்டு வீட்டிற்கு சென்றார். ஏற்கனவே 3 மாதங் களுக்கு முன்பு கருணாநிதி, அறிவாலயத்துக்கு வந்து சென்றார். அதன்பின்னர், நேற்று மீண்டும் அவர் அறிவாலயம் வந்து சென்றுள்ளார்.