‘மக்களுக்காக மக்கள் மன்றத்தில் வாதாடுங்கள்’ கட்சியில் இணைந்த வக்கீல்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை


‘மக்களுக்காக மக்கள் மன்றத்தில் வாதாடுங்கள்’ கட்சியில் இணைந்த வக்கீல்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை
x
தினத்தந்தி 19 March 2018 11:15 PM GMT (Updated: 19 March 2018 7:11 PM GMT)

மக்களுக்காக மக்கள் மன்றத்தில் வாதாடுங்கள் என்று கட்சியில் இணைந்த வக்கீல்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #KamalHaasan

சென்னை, 

கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் இணையதளம் மூலமாகவும், அச்சடிக்கப்பட்ட படிவங்கள் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை பிரமாண்டமாக நடத்துவதற்கு வசதியாக மாவட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

பூர்த்தி செய்த உறுப்பினர் சேர்க்கை படிவங்களை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். அதில் உள்ள விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வார்டு ரீதியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்த பின்னர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜசேகர் ஏற்பாட்டில், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக பணியாற்றி வரும் பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் நேற்று கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்த வக்கீல்களுக்கு கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதையடுத்து வக்கீல்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது, வக்கீல்கள் தங்கள் தரப்பில் இருந்து தெரிவித்த குறைகள் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். கட்சி அலுவலகம் வரும்போது தங்களுடைய அடையாள அட்டையை வக்கீல்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் உத்தரவு போட்டுள்ளார். இதனால் கட்சியில் இணைவதற்காக வந்த வக்கீல்கள் அடையாள அட்டையை வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாக நிர்வாகிகள் கூறியதாவது:-

வக்கீல்கள் கண்ணியத்துடன் செயல்படவேண்டும். உங்களுடைய செயல்பாடுகளே என்னையும், கட்சியின் தலைமையையும் பிரதிபலிப்பதாக அமையும். இதுவரை கோர்ட்டுகளில் வழக்காடினீர்கள். இனிமேல் மக்களுக்காக மக்கள் மன்றத்தில் வாதாடவேண்டும். மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு சேவை செய்யவேண்டும். முன்பு இருந்ததை விடவும் தற்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்பதை உணரவேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் தாமரை இலை தண்ணீராகவும், தன்மை மாறாதவாறும் இருக்கவேண்டும். உங்களுடைய நடத்தையை பார்த்து மக்கள் தாங்களாகவே கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் பிரவேசத்துக்கு பிறகு அடுத்தடுத்த தோற்றங்களில் கமல்ஹாசன் காட்சியளித்து வருகிறார். அந்தவகையில் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாடியுடன் இருந்தார். நேற்று கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ பட பாணியில் புதிய தோற்றத்தில் மீசை வைத்திருந்தார்.

நாளையோடு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது. இதையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியும், பெயர் பலகையும் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story