அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி


அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
x
தினத்தந்தி 19 March 2018 11:45 PM GMT (Updated: 20 March 2018 12:29 AM GMT)

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? என்று சட்டசபையில் தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது. #DMK

சென்னை, 

மதுபான பார்களை ஏலம் விடவில்லை என்பதால், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? என்று சட்டசபையில் தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி (தி.மு.க.) விவாதித்தார். அவருக்கு பதிலளித்து அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ரகுபதி:- 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரி இல்லாத பட்ஜெட் என்று அரசு கூறுகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பதாகவே பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திவிட்டு, வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக கூறிக்கொள்கிறீர்கள். பஸ் கட்டணத்தை நள்ளிரவில் உயர்த்தினீர்கள்.

திருவள்ளுவர் கூற்றுப்படி, நள்ளிரவில் ஆயுதம் காட்டி கொள்ளை அடிப்பதைவிட, கடுமையான சட்டம் இயற்றி அதிக வரி வசூலிப்பது கொடுமையாகும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றினால்தான் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியிலும் 58 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை ரகுபதி கேட்கவில்லை. ஏற்கனவே பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வரி எதையும் போடவில்லை என்று அரசு கூறுவதைத்தான் அவர் சொல்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ரகுபதி பேசிய விதம், குற்றச்சாட்டு கூறியதுபோல் இருந்ததால்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் அதுபற்றி விளக்கிக் கூறுகிறார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- வரி போட்டுள்ளதாக ரகுபதி தவறாக கூறுகிறார். விலை ஏற்றம் என்பது வேறு. வரியை உயர்த்துவது என்பது வேறு. பஸ் கட்டண உயர்வை வரி உயர்வு என்று பேச இடமில்லை.

ரகுபதி:- கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் மீண்டும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அப்படியானால் அந்தத் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லையா? கடந்த ஆண்டு சொன்னதை செய்யவில்லை என்பதால்தான் இந்த அரசை செயல்படாத அரசு என்று சொல்கிறோம்.

வரி வருவாயாக ரூ.86 ஆயிரத்து 858 கோடி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் திருத்திய கணிப்பில் இந்தத் தொகை கண்டிப்பாக குறையும். ஏனென்றால், டாஸ்மாக் மூலம் வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது.

ஆனால் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பார் உள்ளது. ஏலம் விடப்படாமலேயே பார் நடத்தப்படுகிறது. ஏலம் விடப்பட்டு இருந்தால் அந்தத் தொகை ரூ.1,000 கோடி, அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால் ஏலம் விடாமலேயே பார் நடத்த அனுமதித்ததால், அந்தத் தொகை அரசு கஜானாவுக்கு வரவில்லை. அந்தத் தொகை எங்கே செல்கிறது?

அமைச்சர் தங்கமணி:- கிராமப்புறங்களில் பார் ஏலத்தில் அதிக தொகை கிடைப்பதில்லை. எனவே இரண்டாம் ஏலம் விடப்படுகிறது. அனுமதி பெறாமல் பார் நடத்துவதாகத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரகுபதி:- மதுபான பார்களை ஏலம் விட்டால் தி.மு.க.வினரும் எடுக்க தயாராக இருக்கிறோம்.

அமைச்சர் தங்கமணி:- மதுவிலக்குக் கொள்கையை உங்கள் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் நீங்கள் மதுபான பார்களை ஏலம் எடுக்க தயார் என்று கூறுவது முரணாக உள்ளது.

ரகுபதி:- பார்கள் மூலம் யாரோ ஒருதலைபட்சமாக சம்பாதிக்க அனுமதிக்கப்படும்போது, அதை நாங்கள் ஏலம் எடுப்பதன் மூலம் அரசுக்கு பணம் வரும் என்பதால் அப்படிக் கூறினேன்.

அமைச்சர் தங்கமணி:- பார்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.436 கோடிதான் அரசுக்கு கிடைக்கும். இதுதான் உண்மை.

ரகுபதி:- டாஸ்மாக் கடைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. உங்கள் கட்சிக்காரர்களுக்காக பார்களை ஏலம் விடாமல் வைத்திருக்கிறீர்கள். இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் நிர்ணயித்தபடி வழங்கப்படவில்லை.

அமைச்சர் உதயகுமார்:- 3 வகையான பட்டாக்கள் உள்ளன. அவர் ஒரு வகையை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார், 2011-12-ம் ஆண்டு முதல் 14 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கை மிஞ்சி 16.5 லட்சம் பட்டாக்களை ஏழைகளுக்கு வழங்கியுள்ள அரசு இது.

அ.தி.மு.க. அரசில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர் ரகுபதி. அவருக்கு அந்த விவரங்கள் தெரியும். தற்போது இருக்கும் இடத்தை திருப்திப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது.

ரகுபதி:- நான் இருக்கும் இடத்தை திருப்திப்படுத்த அவசியமே இல்லை. ஏனென்றால், இங்குதான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் 66 ஆயிரம் பயனாளிகள் ஏமாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இந்தத் திட்டத்தில் கடந்த ஆண்டு, இந்த ஆண்டு, அடுத்த ஆண்டிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வீடுகள் கட்டித்தரப்படும். இது உறுதி.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story