சசிகலாவுக்கு பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு?


சசிகலாவுக்கு பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு?
x
தினத்தந்தி 19 March 2018 11:39 PM GMT (Updated: 19 March 2018 11:53 PM GMT)

சசிகலாவுக்கு பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RIPNatarajan

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்த நிலையில்  சசிகலாவின் கணவர் நடராஜன்  சென்னை மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி  உயிரிழந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்தது. நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படும்.  அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. 

இந்தநிலையில் சசிகலாவுக்கு பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். ஆனால் சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. 6 மாதங்கள் முடிவடைய இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன.

அதனால் சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கணவரின் இறுதிசடங்கில் பங்கேற்க  சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

Next Story