தமிழகத்தில் நடைபெறும் ரத யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு


தமிழகத்தில் நடைபெறும் ரத யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 March 2018 12:15 AM GMT (Updated: 20 March 2018 9:55 PM GMT)

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வந்து உள்ள ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிராக மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ரத யாத்திரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

செங்கோட்டை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி ராமராஜ்ய ரதயாத்திரை புறப்பட்டது.

இந்த ரதயாத்திரை மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்துக்கு வந்தது.

ராம ராஜ்யத்தை மீண்டும் அமைக்க வேண்டும். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும். தேசிய வாராந்திர விடுமுறை தினமாக வியாழக் கிழமையை அறிவிக்க வேண்டும். உலக இந்து தினம் கொண்டாட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத யாத்திரை நடந்தது.

கேரளாவில் இருந்து ராமராஜ்ய ரதம் நேற்று காலையில் தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரைக்கு வந்தது. கிருஷ்ணானந்த சரசுவதி சுவாமிகள், சாந்த ஆனந்த மகரிஷி ஆகியோர் தலைமையில் ரத யாத்திரை புறப்பட்டு வந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு தமிழக-கேரள எல்லையான கோட்டை வாசல் கருப்பசாமி கோவிலுக்கு ரதம் வந்தது.

ரத யாத்திரையின் முன்பு காவி கொடிகளுடன் மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ரதத்தை வரவேற்கும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இந்து அமைப்பினர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடந்தது. ரத யாத்திரை நோக்கம் பற்றி கிருஷ்ணானந்த சரசுவதி சுவாமிகள் விளக்கி பேசினார். ரதத்தில் ராமர்- சீதை சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு பூஜைகள் செய்யப்பட்டன. பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்பினர் மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் ரதம் செங்கோட்டை வந்தது. அங்கு வாஞ்சிநாதன் சிலை முன்பு இந்து அமைப்பு நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பிறகு தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக ராமராஜ்ய ரதம் மதுரைக்கு சென்றது.

மதுரைக்கு சென்ற ரதம், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றடைகிறது. நாளை (வியாழக் கிழமை) ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக வந்து கன்னியாகுமரி சென்றடைகிறது. 23-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறது.

ராமராஜ்ய ரத வருகையையொட்டி தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஏற்கனவே பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

144 தடை உத்தரவை மீறி செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ரத யாத்திரைக்கு எதிராக சீமான் மற்றும் ஊர்வலமாக வந்த அனைவரும் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு சீமான் உள்பட ஊர்வலமாக வந்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

வாஞ்சிநாதன் சிலை அருகில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி தென்காசி, ஆலங்குளம், குற்றாலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர்.

செங்கோட்டை பார்டர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோரை தென்காசியில் போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருமங்கலம் அருகே கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஒரு வேனை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த வேனில் செங்கோட்டைக்கு போராட்டம் நடத்துவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, மாநில துணை தலைவர் முபாரக், நெல்லை மாவட்ட துணை தலைவர் உஸ்மானி, செயலாளர் கயாஸ், பொதுச்செயலாளர் கனி உள்பட 8 பேர் வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இருந்ததால் நேற்று காலை முதலே செங்கோட்டை, புளியரையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

12.30 மணிக்கு ரத யாத்திரை செங்கோட்டைக்கு வந்த போது வரவேற்பு முடிந்து ரதயாத்திரை புறப்பட்டுச் சென்ற பிறகு பஸ்கள் இயக்கப்பட்டன. கேரளா செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. மதியம் கடைகள் அனைத்தும் வழக் கம் போல் திறக்கப்பட்டன.

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக சென்னையில் தி.மு.க. மற்றும் காங்கிரசார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

184 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றதாகவும், இதில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story