சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824 கோடி மோசடி


சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824 கோடி மோசடி
x
தினத்தந்தி 21 March 2018 11:48 PM GMT (Updated: 22 March 2018 12:32 AM GMT)

போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824 கோடி மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ.யிடம் எஸ்.பி.ஐ. வங்கி கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.

சென்னை,

வங்கிகளில் கோடிகணக்கில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர நகை வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் வங்கிகளிடம் ரூ.824 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ (எஸ்.பி.ஐ.) வங்கி கூட்டமைப்பு சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் ஜி.டி. சந்திரசேகர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இணை இயக்குநருக்கு 16 பக்கத்தில் புகார் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை தியாகராயநகரில் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் (கே.ஜி.பி.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ‘கிரிஸ்’ என்ற பெயரில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் தங்கநகைகள் பெரிய நகைக்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகள், தங்கநகைகள் கையிருப்பு போன்ற விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2007-08-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. எனவே இந்த நிறுவனத்துக்கு 14 வங்கிகளில் புதிதாக கடன்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ‘எஸ்.பி.ஐ.’ வங்கியில் ரூ.175 கோடி, அண்ணாசாலை ‘பஞ்சாப் நேஷ்னல்’ வங்கியில் ரூ.115 கோடி, தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ரூ.45 கோடி, ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் ரூ.30 கோடி, அண்ணாசாலையில் உள்ள ‘சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் ரூ.20 கோடி, தேனாம்பேட்டையில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்’ வங்கியில் ரூ.35 கோடி, ‘தமிழ்நாடு மெர்க்கண்டைல்’ வங்கியில் ரூ.25 கோடி, ராயப்பேட்டை ‘கார்ப்பரேஷன்’ வங்கியில் ரூ.20 கோடி, சைதாப்பேட்டையில் உள்ள ‘ஐ.டி.பி.ஐ.’ வங்கியில் ரூ.45 கோடி, ‘சிண்டிகேட்’ வங்கியில் ரூ.50 கோடி, மயிலாப்பூரில் உள்ள ‘எச்.டி.எப்.சி.’ வங்கியில் ரூ.25 கோடி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ‘ஐ.சி.ஐ.சி.ஐ.’ வங்கியில் ரூ.25 கோடி, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ.30 கோடி, ஆயிரம் விளக்கில் உள்ள ‘ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத்’ வங்கியில் ரூ.18 கோடி என மொத்தம் 14 வங்கிகளில் 658 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனுக்காக கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர்களான நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையை சேர்ந்த பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோருடைய பல்வேறு சொத்துகளில் உறுதிப் பத்திரம் பெறப்பட்டன.

இந்நிலையில், கனிஷ்க் கோல்டு நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடன் கொடுத்த 8 வங்கிகளுக்கு வட்டியையும் செலுத்தவில்லை. அசல் பணத்தையும் வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து வங்கிகளுக்கும் வட்டி செலுத்தப்படவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைகள் தயாரிப்புக் கூடம், ஷோரூம் ஆகிய இடங்களில் வங்கி கூட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் நகை இருப்பு விவரம் குறித்து போலியான ஆவணங்களைக் தாக்கல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை நிதிநிலை அறிக்கைகள், விற்பனை ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

எனவே சட்டவிரோதமாக கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடன் கொடுத்த வங்கிகளுக்கு வட்டியும், அசல் தொகையும் செலுத்தாமல் ஏமாற்றி உள்ளது. இதன் மூலம் 14 வங்கிகளிடம் பெற்ற கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ரூ.824 கோடியே 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 

Next Story