மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்


மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்
x
தினத்தந்தி 22 March 2018 10:30 PM GMT (Updated: 22 March 2018 10:02 PM GMT)

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கி போலி பதிவுகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவருடைய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட புகார் மனுவை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். புகார் மனு விவரம் வருமாறு.

சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய டுவிட்டர் பக்கம் போல ஒரு போலி கணக்கை உருவாக்கி என்னுடைய டுவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும், ஒரு போலி பதிவை உருவாக்கி அதனை வாட்ஸ்-அப், முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தீய எண்ணத்துடனும் இது போன்ற விஷமச் செயலை செய்து வருகிறார்கள். இந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story