நகைக்கடை அதிபர், மனைவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


நகைக்கடை அதிபர், மனைவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 22 March 2018 10:21 PM GMT)

வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்த நகைக்கடை அதிபர் மற்றும் அவரது மனைவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

சென்னை,

நகைக்கடை அதிபரின் சென்னை வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ள வங்கி அதிகாரிகள், அதற்கான நோட்டீசை அந்த வீட்டின் முன்பு நேற்று ஒட்டினர்.

சென்னை தியாகராய நகரில் கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட் (கே.ஜி.பி.எல்.) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையை சேர்ந்த பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி நீதா ஜெயின் ஆகியோர் இயக்குனர்களாக இருந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு கிரிஷ் என்ற பெயரில் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள பக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகைகள் உற்பத்தி கூடங்கள் உள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு தங்கள் லாபம் அதிகரித்து வருவதாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் தொழிலை மேம்படுத்துவதற்காக எஸ்.பி.ஐ. உள்பட சென்னையில் உள்ள 14 வங்கிகளில் ரூ.824 கோடியே 15 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

முதலில் கடனுக்கான வட்டியை அந்த நிறுவனம் முறையாக செலுத்தி வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அந்த நிறுவனம் வட்டியையும் செலுத்தவில்லை, அசல் தொகையையும் செலுத்தவில்லை. இதையடுத்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நடத்திய விசாரணையில் கனிஷ்க் கோல்டு நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.பி.ஐ. வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் ஜி.டி.சந்திரசேகர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு 16 பக்க கடிதம் வாயிலாக புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கனிஷ்க் கோல்டு நிறுவன இயக்குனர்கள் பூபேஷ்குமார் ஜெயின், நீதா ஜெயின், பங்குதாரர்கள் தேஜ்ராஜ் அச்சா, அஜய்குமார் ஜெயின், சுமித் கேடியா மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பூபேஷ்குமார் ஜெயின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பூபேஷ்குமார் ஜெயின், அவருடைய மனைவி நீதா ஜெயின் ஆகியோரிடம் மோசடி பற்றி பெங்களூரு சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நிறுவனம் பற்றியும், வங்கி மோசடி தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் அவர்களிடம் கேட்டு துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிவில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கக் கூடாது என்பன உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் 2 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களின் நடமாட்டத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள கனிஷ்க் நிறுவன அதிபர் பூபேஷ்குமார் ஜெயினின் வீட்டுக்கு நேற்று காலை வங்கி அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வீட்டின் முன்பு, அந்த வீட்டை ஏலம் விடுவது தொடர்பான நோட்டீசை ஒட்டினார்கள். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது.

பூபேஷ்குமார் ஜெயின் வாங்கிய கடனுக்காக ஒவ்வொரு வங்கிகள் மூலமும் எச்சரிக்கை நோட்டீசுகள் தனித்தனியே தொடர்ந்து அனுப்பப்பட்டன. எனினும் அந்த நோட்டீசுகளுக்கு பூபேஷ்குமார் ஜெயின் முறையான எந்த பதிலும் அளிக்கவில்லை. அவருக்கு கடன் வழங்கும்போது, அவரிடம் இருந்து பல்வேறு சொத்துகளின் உறுதி பத்திரங்கள் பெறப்பட்டன. அவருக்கு நாங்கள் வழங்கிய காலக்கெடு முடிந்துவிட்டது. இதையடுத்து அவரது வீட்டை ஏலத்தில் விட முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story