அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு


அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2018 12:15 AM GMT (Updated: 22 March 2018 10:39 PM GMT)

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கடைகளை அகற்ற ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள கடையில் இருந்து பரவிய தீ பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பழனி அடிவாரத்தைச் சேர்ந்த தனசேகரன் உள்ளிட்ட 7 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது.

பழனி மலை அடிவாரத்தில் முருகன் கோவிலுக்கு சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். கோவில் நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகையை முறையாக செலுத்தி வருகிறோம். எங்கள் கடைகளை காலி செய்து 15 நாட்களில் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பழனி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவிலின் பாதுகாப்புக்காக கடைகளை அகற்ற முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் கடைகளுக்கான வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும், இல்லையென்றால் வாடகை பாக்கியை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் கடைகள் கோவில் அடிவாரத்தில் உள்ளன. இந்த கடைகளால் கோவிலுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அடிவாரத்தில் இருந்து 700 படிகளை கடந்து குன்றின் மேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். கடைகளை காலி செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு வியாபாரிகளிடம் கருத்து கேட்கவில்லை. எனவே கடையை காலி செய்வது தொடர்பாக கோவில் இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சுப்பிர மணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் கோவில் வளாகம் முழுவதையும் தரமாக பராமரிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். கோவில் வளாகத்தை மாசு இல்லாமல் பார்த்துக்கொள்வது, சுத்தமாக வைத்திருப்பது, அமைதியான சூழலை ஏற்படுத்துவது ஆகியவையும் அரசின் கடமையாகும். கோவில் வளாகம் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். கடைகள் நடத்த அனுமதித்தால் அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் அதிகாரிகளும் தான் பொறுப்பாவார்கள். அந்த அதிகாரிகள் மீது சட்டப்படி மட்டுமின்றி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தையும் பராமரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கோவில்களில் அனைத்து முறைகேடுகளையும், சட்டவிரோத செயல்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை ஒன்றை 8 வாரங்களுக்குள் அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப வேண்டும்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் வளாகங்களில் உள்ள வணிக நோக்கத்திலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை கடைகளை காலி செய்யவும், வாடகை பாக்கியை வசூலிப்பதற்கும் எதிராக மனுதாரர்கள் கேட்கும் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story