நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொண்டு வர வேண்டும்


நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2018 12:00 AM GMT (Updated: 22 March 2018 11:30 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொண்டு வர வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாங்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது, துணை முதல்-அமைச்சர் இந்த அவையில் ஒரு நல்ல உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். அதாவது, வரும் 29-ந் தேதி வரை பொறுத்து இருப்போம் என்று அவர் தெரிவித்து இருந்தார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலை என்னவென்றால், மத்திய நீர்வளத் துறையின் செயலாளர் யு.பி.சிங் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று பேட்டியளித்து இருக்கிறார்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய, அந்தத் துறையின் செயலாளரே இப்படியொரு பேட்டி தந்திருக்கும் சூழ்நிலையில், நான் ஏற்கனவே இந்த அவையில் கேட்டுக் கொண்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தின் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

அதுபோல, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு, அங்கே இருக்கின்ற உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கொண்டு வந்து, ஒரு அழுத்தம் தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான பணியில், இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.

இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. தினமும் எதிர்க்கட்சித்தலைவர் இதை அரசுக்கு நினைவூட்டுகிறார். அதற்கு மேலாக நாங்களும் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்து வருகிறோம். 13 நாட்கள் நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றமே முடங்கி போய் இருக்கிறது என்றால் அதற்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம் தான் காரணம்.

இந்த அளவிற்கு நாம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் சட்டத்தின் மூலமாக, நீதிமன்றத்தின் மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. செய்தித் தாள்களில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துகள் எந்த அளவிற்கு, அவர் என்ன நினைத்துச் சொன்னார் என்ற விவரம் இன்னும் அரசுக்கு வந்து சேரவில்லை.

முழு விவரமும் தெரிந்து அதனை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்றே நான் கருதுகிறேன். பொறுத்திருப்போம். அது எந்த நிலையை அடைகின்றது என்பதை தீர ஆராய்ந்து, மீண்டும் அனைவரும் கூடிப்பேசி, எந்த மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்தினால் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசு அமைக்கும் என்ற சூழல் ஏற்படும், அதற்கு எந்த மாதிரி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று ஒரு நல்ல முடிவை எடுப்போம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story