காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- சரத்குமார்


காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- சரத்குமார்
x
தினத்தந்தி 23 March 2018 7:09 AM GMT (Updated: 23 March 2018 7:09 AM GMT)

நாடாளுமன்றத்தை முடக்குவதால் மட்டும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். #CauveryIssue #Sarathkumar

மேட்டூர்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கால காலத்திற்கும் தடையின்றி கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி மேட்டூர் அணை முதல் மயிலாடுதுறை வரை நடைபெறும் என அதன் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பேரணி தொடங்கியது. இப்பேரணிக்கு நடிகர் சரத்குமார் தலைமை தாங்கினார். இந்த பேரணி சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மயிலாடுதுறையை சென்றடைகிறது.

முன்னதாக நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் வாரியம் அமைப்பதற்கான எந்த சூழ்நிலையும் உருவாகாமல் இருப்பதால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்துகிறோம்.

மேட்டூரில் இருந்து கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை பேரணி நடைபெறுகிறது. இன்று தொடங்கி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முடிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததற்கு கர்நாடக தேர்தல் தான் முக்கிய காரணம்.

நதி நீர் பங்கீடு உலக அளவில் சிறப்பாக நடந்து வரும்போது ஒரு சில மாநிலங்களுக்குள் நடக்காமல் இருப்பது மிகப்பெரிய வேதனையும் சோதனையுமான ஒன்று. மத்திய அரசு மாறி மாறி வந்தாலும் அதனை கவனிக்காமல் இருக்கும் சூழல் தான் உள்ளது. மக்கள் இதற்காக போராட வேண்டும்.

ரஜினி மற்றும் கமலிடம் சென்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து கருத்து கேளுங்கள். அவர்கள் அதற்கு பதில் சொன்ன பிறகு நாங்கள் கூறுகிறோம். பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது மிக வேதனையான வி‌ஷயம். வன்மையாக கண்டிக்கிறோம்.

ரத யாத்திரை எதற்காக புதிதாக வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. மக்களுக்கு புரிந்தால் சரி. இன்றைய சூழலில் இது சிறுபான்மையினர் மத்தியில் ஒருவித அச்சுறுத்தலை உருவாக்குமோ? என்று தோன்றுகிறது. இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார். 

நாடாளுமன்றத்தை முடக்குவதால் மட்டும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகத்திலிருந்து டெல்லிக்கு நடந்தே செல்வேன் என கூறினார்.

தாங்கள் வைத்திருக்கும் தாடியின் ரகசியம் என்ன என்று கேட்கபட்டதற்கு பிரதமராவதற்காக தாடி வைத்துள்ளேன் என கேலியாக பதில் அளித்தார். 

Next Story