மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக்கை மீண்டும் தேர்வு செய்யவேண்டும்


மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக்கை மீண்டும் தேர்வு செய்யவேண்டும்
x
தினத்தந்தி 1 April 2018 10:15 PM GMT (Updated: 1 April 2018 9:55 PM GMT)

மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக்கை மீண்டும் தேர்வு செய்யவேண்டும் என்று மலேசிய வாழ் இந்தியர்களுக்கு டான்ஸ்ரீ நல்லா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசியத்தலைவரும், மலேசிய நாட்டு மேல்சபை எம்.பி.யுமான டான்ஸ்ரீ நல்லா சென்னையில் நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 5-ந் தேதியுடன் நிறைவடைகிறது. மலேசியாவின் 2-வது பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக் உசைனின் மகன் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தற்போது பிரதமராக இருக்கிறார். மலேசியாவின் 6-வது பிரதமராக பதவி வகிக்கும் நஜீப் ரசாக் துணை பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியர்களுக்கான அமைச்சரவை சிறப்பு குழு தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்தியர்களுக்கு ‘மைடப்தார்’ எனப்படும் குடியுரிமை அங்கீகாரம் வழங்க சிறப்பு உத்தரவை பிறப்பித்தார். இன்னும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளார். எந்த பிரதமரும் செய்யாத வகையில், உரிமை அந்தஸ்தை பிரதமராக பதவி ஏற்றது முதல் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு முன்னுரிமையாக நஜீப் ரசாக் வழங்கி வருகிறார். ஒரே மலேசியா கொள்கையை அறிமுகப்படுத்தி பல்வேறு இன மக்களையும் ஒன்றுபடுத்தியவர். தமிழ் பள்ளி, இந்து கோவில், அரசு சார்பற்ற இந்தியர் இயக்கங்கள் ஆகியவற்றுக்கு தாராளமாக மானியங்களை அள்ளி கொடுத்தவர்.

மலேசிய இந்தியர் வியூகம் என்ற திட்டத்தை அமைத்து இந்தியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி செய்தவரும் அவர் தான். மலேசியாவில் தமிழ் பள்ளிகள் 534 ஆக இருந்தன. நஜீப் ரசாக் பிரதமராக பதவி வகித்த காலத்தில் மேலும் 6 பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டன. மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்காக ரூ.252 கோடி அளவுக்கு பங்குகளை வழங்கியிருக்கிறார். நம்பிக்கை என்ற சொல்லை தமிழில் அதிகமாக உச்சரித்த பெருமையும் அவருக்கு உண்டு.

மலேசிய சுங்க துறை தலைமை இயக்குனராக தமிழரான டத்தோ துளசி சுப்பிரமணியத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நியமித்து, இந்தியர்களுக்கு அங்கீகாரம் அளித்தவரும் அவர் தான். 30 ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் இந்தியர்களுக்கு 2 அமைச்சர் பதவிகளை வழங்கி நஜீப் ரசாக் அழகு பார்த்தவர். முந்தைய காலங்களில் ஒருவர் மட்டுமே அமைச்சராக நியமிக்கப்பட்டனர். தைப்பூசம் உள்ளிட்ட இந்தியர்களின் விழாக்களில் பங்கேற்று சமய நல்லிணக்கம் கண்ட ஒரே தலைவர்.

மகாதிர் முகமது பிரதமராக இருந்தபோது சர்வாதிகார முறையில் ஆட்சி நடந்தது. அனைத்து நடவடிக்கைகளுமே சர்வாதிகார எண்ணத்தில் நடைபெற்றன. எதிர்க்கட்சியினரை சர்வாதிகாரமாக நடத்திய மகாதிர் முகமது, இன்று அந்த தலைவர்களுடன் இணைந்து நாட்டையே குழப்பிக்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நஜீப் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மீண்டும் அமைந்தால் தான் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வசந்தகாலமாக இருக்கும். மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களை தன் பிள்ளைகளைப்போல பாவிப்பவர் நஜீப் ரசாக். கேட்காமலேயே இந்தியர்களுக்கு அவர் ஏராளமானவற்றை செய்து கொடுத்து வருகிறார்.

நஜீப் ரசாக் 8 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு செய்ததில், கால் பங்கு கூட 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதிர் முகமது செய்து கொடுக்கவில்லை. எனவே இன்னும் 10 ஆண்டுகள் நஜீப் ரசாக் பிரதமராக இருந்தால் இந்தியர்களுக்கு இன்னும் ஏராளமானவற்றை செய்து கொடுப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை. இந்தியர்களின் வாக்கு தேசிய முன்னணி அரசு அமைய முக்கியமானதாக இருக்கிறது. எனவே மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் நஜீப் ரசாக்கை மீண்டும் பிரதமராக தேர்வு செய்யவேண்டும். மீண்டும் நஜீப் ரசாக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story