ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஆணையின் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஆணையின் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 April 2018 9:57 PM GMT (Updated: 3 April 2018 9:57 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த ஹென்றி தாமஸ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி எம்.ஜி.ஆர். திடலில் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி டவுன் போலீஸ் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி அனுமதி மறுத்து விட்டார். ஆனால் நாங்கள் ஐகோர்ட்டின் நிபந்தனைகளின்படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே கண்டன பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல், “ஏற்கனவே கடந்த 24.3.2018 அன்று வேறு ஒரு பிரிவினருக்கு ஐகோர்ட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது. ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். மேலும் ஸ்டெர்லைட் ஆலையானது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி உள்ளது. தூத்துக்குடியில் ஒரு பிரிவினர் ஆலைக்கு ஆதரவாகவும், ஒரு பிரிவினர் ஆலைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். எனவே கண்டன பொதுக் கூட்டம் நடத்த அனுமதியளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்” என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு நகலை சமர்ப்பிக்க, அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.

Next Story