தஞ்சாவூரில் இருந்து 2வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தினை மு.க. ஸ்டாலின் தொடங்கினார்


தஞ்சாவூரில் இருந்து 2வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தினை மு.க. ஸ்டாலின் தொடங்கினார்
x
தினத்தந்தி 8 April 2018 9:27 AM IST (Updated: 8 April 2018 9:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரின் சூரக்கோட்டையில் இருந்து 2வது நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தினை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். #MKStalin

தஞ்சாவூர்,

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு  வருகின்றன.

தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு  பயணத்தை நடத்த  தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க காவிரி உரிமை மீட்பு பயணம் இரண்டு குழுக்களாக மேற்கொள்ள  இருக்கிறது. திருச்சி முக்கொம்பிலும், வருகிற 9-ந் தேதி அரியலூரிலும் இந்த பயணம் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருச்சி முக்கொம்புவில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தினை நேற்று தொடங்கினார்.  அதற்கு முன் திரளாக கூடியிருந்த கூட்டத்தினரின் முன் அவர் பேசினார்.

அதில், இது அரசியலுக்காக நடைபெறும் பயணம் அல்ல.  தமிழக உரிமையை மீட்டெடுக்கவே இந்த நடைபயணம் என்று கூறினார்.  தொடர்ந்து தொடக்க நிகழ்ச்சியாக முக்கொம்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் மு.க. ஸ்டாலின் மற்றும்  கூட்டணி கட்சி  தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள்,  பல்வேறு அமைப்பினர்  அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.

தொடர்ந்து இன்று 2வது நாளாக தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து மு.க. ஸ்டாலின் நடைபயணத்தினை தொடங்கியுள்ளார்.  இதில் திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அவர் இந்த பயணத்தில் பட்டுக்கோட்டை, கோவிலூர், நம்பிவயல், வாண்டையார் குடியிருப்பு வரை செல்கிறார்.

Next Story