காவிரி விவகாரம் : ”ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் ” நடிகர் சத்யராஜ் ஆவேச பேச்சு
திரைத்துறை சார்பில் நடந்த மௌன அறவழி போராட்டத்தில் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என்று நடிகர் சத்யராஜ் கூறினார். #CauveryIssue #SterliteIssue #TamilFilmFraternity
சென்னை,
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திரையுலகினரின் மவுன போராட்டம்
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரசாந்த், சத்யராஜ், பார்த்திபன், விவேக், உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, போராட்டத்தை துவக்கினர்.
ரஜினி-கமல் பங்கேற்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைத்துறை சார்பில் நடக்கும் மௌன அறவழி போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டொர் பங்கேற்றனர்.
மக்களுக்காக போராடுவது முக்கியம்
நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்பொழுது, சுயநலமற்று போராடி வரும் அனைவருக்கும் தமிழ் திரையுலகம் வணங்குகிறது. தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது. திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக இன்று மௌன அறவழி போராட்டம் என பேசினார்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
* மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது.
* காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
* திரையுலகினரின் கையெழுத்துகளை பெற்று தீர்மானங்கள் அளுநரிடம் அளிக்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி திரையுலகினர் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசிலாகி கெடுக்க வேண்டாம்.மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கம் எழுப்பினர்.
ஆளுநரை சந்தித்து தீர்மானத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.
ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திரையுலகினரின் அறவழிப்போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் ஒளிந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திரையுலகினரின் அறவழிப்போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.
Related Tags :
Next Story