ஸ்டெர்லைட் ஆலையை தே.மு.தி.க. முற்றுகை பிரேமலதா உள்பட 500 பேர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை தே.மு.தி.க. முற்றுகை பிரேமலதா உள்பட 500 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2018 5:28 AM IST (Updated: 9 April 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக பிரேமலதா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் 56-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் பல்வேறு இடங்களிலும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தே.மு.தி.க. மாநில மகளிர் அணி தலைவி பிரேமலதா, துணை பொது செயலாளர் சுதீஷ் ஆகியோர் நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பிரேமலதா பேசியதாவது:-

அ.குமரெட்டியபுரம் பகுதியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து செல்கிறேன். தனியார் பரிசோதனைக்கூடத்தில் கொடுத்து தண்ணீரில் கலந்து உள்ள மாசு குறித்து 10 நாட்களுக்குள் உங்களுக்கு முழுமையான விவரங்களை தெரிவிக்கிறேன். தூத்துக்குடி முழுவதும் நிலம், நீர், காற்று மாசு ஏற்பட்டு உள்ளது.

உங்கள் உயிரை மதிக்காத, சந்ததிகளை காப்பாற்றாதவர்கள் யாராக இருந்தாலும் வருகிற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். உங்கள் பிரச்சினை முடியும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தே.மு.தி.க.வினர் தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றனர். அங்கு ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதை தொடர்ந்து பிரேமலதா தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதையடுத்து பிரேமலதா, சுதீஷ் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரேமலதா பேசும்போது, எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடுவது இல்லை என்றும், கேப்டன் டி.வி. மட்டுமே செய்திகளை வெளியிட்டு வருகிறது என்றும் 3 முறை கூறினார். இதற்கு மற்ற செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தே.மு.தி.க.வினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில செய்தியாளர்களை தே.மு.தி.க.வினர் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் தொடர்பாக பிரேமலதா, சுதீஷ் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story