மனைவியைக் கொலைசெய்துவிட்டு போலீஸிடம் நாடகமாடிய சென்னை கோயில் குருக்கள் கைது


மனைவியைக் கொலைசெய்துவிட்டு  போலீஸிடம் நாடகமாடிய சென்னை கோயில் குருக்கள் கைது
x
தினத்தந்தி 9 April 2018 12:38 PM IST (Updated: 9 April 2018 12:38 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத காரணத்துக்காக மனைவியைக் கொலைசெய்துவிட்டு, போலீஸிடம் நாடகமாடிய சென்னை கோயில் குருக்கள் வசமாக சிக்கியுள்ளார்.

சென்னை

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர், பாலகணேஷ் என்ற பிரபு. இவர், வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாகப் பணியாற்றிவந்தார். இவருக்கும், வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ஞானப்பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், சென்னை வடபழனி தெற்கு சிவன்கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்துவந்தனர். கடந்த 5ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஞானப்பிரியா வீட்டுக்குள் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். பாலகணேஷ், கழிவறையில் கை, கால்கள் கட்டப்பட்டநிலையில் மயங்கிக் கிடந்தார். கழிவறைக்குச் சென்ற வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி, பாலகணேஷ் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், வடபழனி போலீஸார் பாலகணேஷிடம் விசாரித்தனர். 

இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பாலகணேஷுக்கும் ஞானப்பிரியாவுக்கும் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை. இதனால், அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படும். கடந்த 4-ம் தேதி இரவு குழந்தையில்லாதது பற்றிய பேச்சால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகணேஷ், மனைவியைத் தாக்கியுள்ளார். அதில், அவர் இறந்துவிட்டார். கொலையை மறைக்க அதிரடியாக யோசித்த பாலகணேஷ், ஞானப்பிரியாவின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி, வீட்டுக்குள் உடலை போட்டுள்ளார். மனைவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக பாலகணேஷைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

மேலும்  கோயில் குருக்களான கணவர் பாலகணேஷிடம் இருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஞானப்பிரியா கொலை வழக்கில் சி.சி.டி.வி கேமராவில் எந்தப் பதிவும் இல்லை. இதனால், வீட்டுக்குள் வெளிநபர்கள் யாரும் செல்லவில்லை என்பதை முதலில் உறுதிசெய்தோம். இதனால், எங்களின் சந்தேகப் பார்வையில் பாலகணேஷ் இருந்துவந்தார். அவருக்கு ஏற்பட்ட காயங்களிலும் எங்களுக்கு சந்தேகம் இருந்துவந்தது. மனைவியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போதும் அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தோம். கொலை வழக்குத் தொடர்பாக, பாலகணேஷ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் விசாரித்தோம். அப்போதுதான் குழந்தை இல்லாததால் பாலகணேஷ், ஞானபிரியாவுக்கிடையே தகராறு ஏற்படும் என்ற தகவல் கிடைத்தது. அதன்பிறகு, அதுதொடர்பான கேள்விகளை பாலகணேஷிடம் கேட்டோம். அப்போது, ''என்னுடைய தலையில் கொள்ளையர்கள் அடித்ததால், அதன்பிறகு எனக்கு எதுவும் தெரியாது'' என்ற தகவலை மட்டும் திரும்பத் திரும்பத் தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்தபோது, குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகளில் பாலகணேஷின் ரேகையும், இன்னொரு நபரின் கைரேகையும் பதிவாகியிருந்தன. பாலகணேஷ் மட்டுமல்லாமல், அவரது நண்பர் ஒருவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் மூலம்தான் இந்தக் கொலைச் சம்பவத்தை பாலகணேஷ் நடத்தியுள்ளார். பிறகு, ஒன்றுமே தெரியாததுபோல எங்களிடம் நாடகமாடியுள்ளார். எங்களின் விசாரணையில் அவரது நாடகம் தெரிந்துவிட்டது. ஞானப்பிரியாவிடமிருந்த நகைகள், பாலகணேஷின் நண்பரிடம் இருக்கிறது. அதைப் பறிமுதல்செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

Next Story