‘பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தை வெற்றியடைய செய்யுங்கள்’ வைகோ வேண்டுகோள்
பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர் கடந்த 46 மாத காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழக மக்கள் எரிமலையாக வெடித்து கொந்தளித்து வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்குவதற்கு நாசகாரத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முனைந்துள்ளது.
பாசிசப் போக்குடன் தமிழ்நாட்டிற்கு எதிராக வஞ்சகம் செய்து வரும் பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 12-ந் தேதி தமிழகம் வரும்போது, ஒட்டுமொத்த தமிழகமே அணி திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் 12-ந் தேதி அன்று தமிழகம் வரும்போது, பிரதமர் மோடி கருப்புக் கொடி கடலைக் கண்டார் என்று உலகம் அறியும் வகையில் கருப்புக்கொடி போராட்டம் அமைய வேண்டும். தமிழர் இல்லம்தோறும் கருப்புக் கொடிகள் பறக்கட்டும். அலுவலகங்களில் பணிபுரிவோர், ஆலைத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கருப்புப் பட்டை அணிந்து மோடி அரசுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையை பாதுகாக்க, காவிரியில் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை மீட்க தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்பதை பிரதமர் நரேந்திரமோடி உணரும் வகையில் கருப்புக் கொடி அறப்போரை வெற்றி அடைய செய்திட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story