உண்ணாவிரதத்தில் பங்கேற்க ஊர்வலமாக வந்த கராத்தே தியாகராஜன் உள்பட 300 பேர் கைது
உண்ணாவிரதத்தில் பங்கேற்க ஊர்வலமாக வந்த கராத்தே தியாகராஜன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்துக்கு முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, செயற்குழு உறுப்பினர் அகமது அலி உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில், எஸ்.சி. அணி மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், சுசீலா கோபாலகிருஷ்ணன், சாந்தி, திருவான்மியூர் மனோகரன், நாச்சிக்குளம் சரவணன், துறைமுகம் ரவிராஜ், சைதை முத்தமிழ், விருகை ராமச்சந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் அடையாரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்றனர்.
இதற்கு போலீசார் தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக கராத்தே தியாகராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, இந்திரா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதையடுத்து கராத்தே தியாகராஜன் தலைமையில் கைது செய்யப்பட்ட 300 பேரும் அந்த மண்டபத்திலேயே மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து கராத்தே தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் நான் பதவி பிச்சை கேட்கவில்லை. அவரும் எனக்கு கொடுக்கவில்லை. எங்களுடைய தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரத்தின் சிபாரிசின்படி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை எனக்கு பதவி கொடுத்தது. எங்களுடைய தலைவி சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் எனக்கு மாவட்ட தலைவர் பதவி கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் திருநாவுக்கரசர் கூறியிருப்பது வருந்தத்தக்கது. என்னையும், எங்களுடைய தலைவர் ப.சிதம்பரத்தையும் திருநாவுக்கரசர் எதற்காக தாக்கி பேசுகிறார்? என்று தெரியவில்லை. உண்ணாவிரதத்தில் ஊர்வலமாக சென்று பங்கேற்கவேண்டும் என்று நினைத்தோம். போலீசார் அனுமதி தர மறுத்து, எங்களை கைது செய்தனர். இதனால் நாங்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த, திருமண மண்டபத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரத்தை அடுத்த காமராஜபுரம் பஸ் நிலையத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தளர்த்தி, தலித் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. தலைவர் ஐயப்பன், தாம்பரம் நகர தலைவர் விஜய் ஆனந்த், செம்பாக்கம் நகர தலைவர் மார்த்தாண்டம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவொற்றியூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.மகீந்திரன் தலைமை தாங்கினார். பகுதி தலைவர்கள் அரவிந்த், ஆறுமுகம், நாகராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் எர்ணட்ஸ்பால் தேசிய மணி, பொண்ணுரங்கம், தீர்த்தி உள்பட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story