போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற ஏட்டுக்கு 3 ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
3 போலீஸ்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த போலீஸ் ஏட்டுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் பிரதாப் சிங் (வயது 47). மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தலைமை ஏட்டுவாக இருந்த இவர், காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவருடன் வேலை பார்த்து வந்த சக போலீஸ்காரர்கள், விஜய் பிரதாப் சிங்கை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
துப்பாக்கி சூடு
இந்தநிலையில் கடந்த 8-10-2014 அன்று அதிகாலை 4.50 மணியளவில் விஜய் பிரதாப் சிங் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் முதல் தள ஓய்வறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் தாராக்பூரைச் சேர்ந்த தலைமை ஏட்டு மோகன்சிங் (47) என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து கட்டிடத்தின் தரை தளத்துக்கு வந்த அவர், அங்கு அமர்ந்து இருந்த சேலம் தேவாய்திபட்டியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (58), உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் (58), மதுரை பேரையூரைச் சேர்ந்த தலைமை ஏட்டு சுப்புராஜ் (52) ஆகிய 3 பேரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கல்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன், சுப்புராஜ் இருவரும் அன்றே பரிதாபமாக இறந்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பிரதாப் சிங், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்து விட்டு தப்பி ஓடும்போது கால் தவறி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த போலீஸ்காரர் கோவர்த்தன பிரசாத் (42) ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் பிரதாப் சிங்கை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், 3 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்றதற்காக ஏட்டு விஜய் பிரதாப் சிங்குக்கு 3 ஆயுள் தண்டனையும், மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.
Related Tags :
Next Story