சென்னையில் ஐ.பி.எல். போட்டி : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி


சென்னையில் ஐ.பி.எல். போட்டி : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 10 April 2018 5:30 AM IST (Updated: 10 April 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்று ஐ.பி.எல். போட்டி நடத்தாமல் இருந்தால் நல்லது. மீறி நடத்தினால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிரமிளா குருமூர்த்தி கேரளாவை சேர்ந்தவர் என்று சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேடுதல் குழு பரிந்துரை அடிப்படையிலே இசை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரமிளா குருமூர்த்தியின் தந்தை தமிழர். தாயார் கேரளா. எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.

2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட விஜயகுமார் கர்நாடகாவை சேர்ந்தவர். அப்போது ஏன் எதிர்க்கவில்லை?

இயக்குனர் பாரதிராஜா தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று குறை சொல்லி இருக்கிறார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. அதற்கு தலைவர் யார்? தமிழ்நாட்டை சேர்ந்தவரா?. முதலில் உங்கள் துறையை உங்களால் திருத்த முடியவில்லை.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய உணர்வுக்கு மதிப்பளித்து நடத்தாமல் இருந்தால் நல்லது. மீறி நடத்தப்பட்டால் கடந்த காலங்களில் என்ன பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ? அதை தான் கொடுக்க வேண்டும். அது தான் நியதி.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story