அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை; திருமாவளவன்
அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிகிறது என திருமாவளவன் இன்று கூறியுள்ளார். #Thirumavalavan
திருவாரூர்,
உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதை கண்டித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று கடந்த 1-ந்தேதி அன்று தி.மு.க. வின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் அடிப்படையில், வருகிற 12-ந்தேதி அன்று சென்னை வரவிருக்கும் பிரதமருக்கு அனைத்து கட்சி தோழர்களும் கருப்பு கொடி காட்டுவார்கள் என தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் நிருபர்களிடம் கூறும்பொழுது, 14 வருடங்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிசபையில் தி.மு.க. இடம் பெற்று இருந்தது. காவிரி அணை சட்டருக்கான சாவியை எடுத்துக்கொள்ள இவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. அதை விட்டு விட்டு தற்போது நடைபயணம் மேற்கொள்வது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போன்று உள்ளது.
பிரதமர் வரும் போது எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டுவோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் பச்சை கொடி காட்டுவோம். காவிரி மேலாண்மை பிரச்சினையில் சட்டரீதியாக தேவையான அழுத்தம் கொடுத்து வருகிறோம். காவிரி பிரச்சினை, பாலாறு பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை ஆகியவைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றம் இருந்தது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் ஏற்படுவது உண்மை தான் என கூறினார்.
இந்நிலையில், காவிரி உரிமை மீட்பு பயணத்தில் 2வது குழு 2வது நாள் பயணத்தினை அரியலூர் கீழுப்பழுவூரில் தொடங்கியது. இதில், திருமாவளவன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் பேசியதுபற்றி திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அவரது பேச்சு அ.தி.மு.க.வுக்கு மிக பெரிய களங்கத்தினை ஏற்படுத்தும். வரலாற்றில் பிழையையும் ஏற்படுத்தும். ஜெயலலிதா இல்லை என்பது இப்பொழுது நமக்கு வேதனையை தருகிறது. அ.தி.மு.க.வை சரியாக வழி நடத்த அரசியல் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பது தெரிகிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story