அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது: மு.க ஸ்டாலின்


அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது: மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 April 2018 9:23 PM IST (Updated: 10 April 2018 9:23 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் போட்டிக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- ”ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. வாலாஜா சாலையே போராட்டக்களமாக மாறியிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு மாநில அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது.

பாரதிராஜா,வைரமுத்து உள்ளிட்டோரை கைது செய்து, அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி காவிரி போராட்டத்தை திசைதிருப்ப தமிழக காவல்துறையை அதிமுக அரசு பயன்படுத்துவது வெட்கக்கேடு. தமிழுணர்வு அதிமுக அரசுக்கு அறவே பட்டுப்போய் விட்டது. காவிரி பிரச்சினையை விட கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகி விட்டது வேதனையளிக்கிறது.

காவிரி உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டு இருக்கும் எடப்பாடி அரசு இனி ஆளும் அனைத்து தகுதியையும் இழந்து நிற்கிறது. போலீஸாரின் அத்துமீறலையும், அதிமுக அரசு காவல்துறை அதிகாரிகள் கட்டவிழ்த்து விடும் அராஜகத்திற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் அறவழியில் நடத்தப்படும் போராட்டமே வெற்றி பெறும்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story