ரஷிய ராணுவ வீரர் கடலில் மூழ்கி பலி ராணுவ கண்காட்சிக்கு வந்தவர் பரிதாப முடிவு
திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சிக்கு வந்த ரஷிய நாட்டு ராணுவ வீரர் மாமல்லபுரம் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர் இகோர் (வயது 55) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்தார். இவர் ராணுவ தளவாட பொருட்கள் வினியோகிக்கும் பிரிவில் ரஷியாவில் பணியாற்றி வந்தார். மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் ரஷியாவை சேர்ந்த அவரது பெண் நண்பர்கள் கார்டியானா(44), இரினா(43) ஆகியோரும் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
கடலில் மூழ்கி பலி
இந்தநிலையில் நேற்று காலை விடுதியின் பின்புறம் உள்ள கடலில் இறங்கி இகோர் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி அவர் கடலில் மூழ்கினார். சிறிதுநேரத்தில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இகோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த வருவாய் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து ரஷியாவிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story