அரை நிர்வாணமாக்கி போலீசார் தாக்கிய விவகாரம்: தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
அரை நிர்வாணமாக்கி போலீசார் தாக்கிய விவகாரத்தில் தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உப்பன்குளத்தை சேர்ந்தவர் போஸ். தொழிலாளி. இவர், மக்கள் கண்காணிப்பகத்தின் மூலம் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எனது மகன் காதல் திருமணம் செய்தது தொடர்பாக கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை விசாரணைக்காக கடந்த 2008–ம் ஆண்டு அழைத்தார். விசாரணைக்கு பின்பு, இன்ஸ்பெக்டர் என்னை விடுவித்தார். பின்னர் சப்–இன்ஸ்பெக்டர் விஜயன், மீண்டும் என்னை விசாரணைக்காக அழைத்தார். போலீஸ் நிலையம் சென்ற என்னை, அரை நிர்வாணமாக்கி தாக்கி என் மீது பொய் வழக்குப்பதிவு செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் விஜயனின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறல் ஆகும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை பார்க்கும் போது சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை சப்–இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.