ஐபிஎல் போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம்: சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி பிரச்சினையில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐ.பி.எல். போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையும் மீறி போட்டிகள் நடத்தப்பட்டால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் திட்டமிட்டபடி நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் நேற்று இரவு நடத்தப்பட்டது.
இதனை கண்டித்து நேற்று மாலை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, டைரக்டர் பாரதிராஜா தலைமையிலான கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, டைரக்டர் பாரதிராஜா மற்றும் திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் அண்ணாசாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தள்ளிக் கொண்டு வாலாஜா சாலை வழியாக வேகமாக ஓடினர். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தள்ளிவிட்டு விட்டு மைதானத்தை முற்றுகையிடுவதற்காக முன்னேறி சென்றனர். அப்போது தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர். இந்த நேரத்தில் போலீசார் மீதும் தாக்குதல் நடைபெற்றது.
சங்கர்நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் செந்தில் குமார் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜேஷ், பிரதீப், ஜெரால்டு, தனசேகர், நந்தகுமார், கார்த்திக், சரத்குமார், மணிகண்டன், சிவா, சரவணகுமார் ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் சிவா ராமநாதபுரம் மாவட் டத்தையும், சரவணகுமார் விருதுநகரையும் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் திருமுல்லைவாயல், அம்பத்தூர் பகுதியினர் ஆவர்.
இவர்கள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாக பேசுதல், அனுமதியின்றி கும்பலாக கூடுதல் உள்ளிட்ட 9 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் ரசிகர்களை போல கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் புகுந்தனர். அவர்கள் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புலி படம் பொறித்த நாம் தமிழர் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக அங்கிருந்து வெளியேற்றி கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மகேந்திரன், சுகுமாறன், மார்டின், ஏகாம்பரம், ஆல்பர்ட், சரவண பிரகாஷ், அய்யனார், பிரபாகரன், வாகை வேந்தன், ராஜ்குமார், பொன்வேல் ஆகிய 11 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் கடுமையான சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல், அனுமதிக்கப்படாத இடத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியது, அவதூறாக பேசியது ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். மைதானத்துக்குள் போராட்டம் நடத்தியவர்களில் மகேந்திரன் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும், சுகுமாறன் சென்னை மாவட்ட செயலாளராகவும், மார்ட்டின் அம்பத்தூர் மாவட்ட செயலாளராகவும் உள்ளனர்.
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசியது என வழக்குகள் பதியப்பட்டுள்ளது
Related Tags :
Next Story